திருத்தணி:
தவெக நிர்வாகிகள், தொண்டர்கள் தேர்தல் பணிகளை புறக்கணித்ததால், திருத்தணி தவெக வேட்பாளர் சத்யகுமார் தன்னந்தனியாக தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டதால், பரபரப்பு ஏற்பட்டது.
திருத்தணி சட்டப்பேரவை தொகுதி வேட்பாளரான, தவெக தேசிய செய்தி தொடர்பாளர் சத்யகுமார், சில தினங்களுக்கு முன் திருத்தணி நகருக்கு வந்தார். அப்போது ஆர்வத்துடன், தொகுதியின் கட்சி நிர்வாகிகள் சத்யகுமாரை சந்திக்க வந்தனர்.
அப்போது வேட்பாளர் சத்யகுமார், நிர்வாகிகளை மதிக்காமல் தகாத வார்த்தைகளால் பேசியதாக கூறப்படுகிறது.
இதனால் சத்யகுமார் மீது அதிருப்தியில் இருக்கும் தொகுதியை சேர்ந்த தவெக நிர்வாகிகள், சத்யகுமாரை மாற்றி வேறு வேட்பாளரை கட்சி தலைமை அறிவிக்க கோரி, தேர்தல் பணிகளை புறக்கணித்து வருகின்றனர்.
தவெக வேட்பாளர் சத்யகுமார் வேட்பு மனு தாக்கல் செய்ய எதிர்ப்பு தெரிவித்து, திருத்தணி கோட்டாட்சியர் அலுவலகம் அருகே சென்னை – திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் 50-க்கும் மேற்பட்ட தவெகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
நேற்று முன்தினம் மதியம் 2.45 மணியளவில் தவெக வேட்பாளர் சத்யகுமார், மாவட்ட செயலாளர் டில்லிபாபு மற்றும் கட்சியின் முக்கிய நிர்வாகி களை கூட அழைத்து செல்லாமல் தனியாக திருத்தணி கோட்டாட்சியர் அலுவலகத்துக்கு சென்று வேட்புமனு தாக்கல் செய்தார்.
இந்நிலையில், தவெக வேட்பாளர் சத்யகுமார் நேற்று திருத்தணி நகரில், கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் யாரும் இல்லாமல் தன்னந்தனியாக தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
அப்போது, அவர் பைபாஸ் சாலை உள்ளிட்ட பகுதிகளில் தனியாக நடந்து சென்று, தேநீர் கடைகள், பெட்ரோல் பங்க் மற்றும் சாலையில் நடந்து சென்றவர்களிடம் விசில் சின்னத்துக்கு வாக்களிக்குமாறு பிரச்சாரம் செய்தார். இதனால், திருத்தணியில் பரபரப்பு ஏற்பட்டது.