சென்னை,

ஆட்சியில் பங்கு என்பது தமிழ்நாட்டுக்கு ஒத்துவராது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திட்டவட்டமாக கூறினார்.
ஆட்சியில் பங்கு தமிழகத்திற்கு ஒத்துவராது என்பது எங்களுக்கும் தெரியும். அவர்களுக்கும் தெரியும் என்றும் அவர் கூறினார்.
ஆட்சியில் பங்கு வேண்டும் என காங்கிரஸ் கட்சியில் சிலர் தொடர்ந்து பேசியும், தலைமையை வலியுறுத்தியும் வந்த நிலையில் முதலமைச்சர் இன்று இதனை அதிரடியாக அறிவித்தார்.
இதன் மூலம் ஆட்சியில் பங்கு என்ற காங்கிரஸ் கோரிக்கைக்கு முதல்வர் முற்றுப்புள்ளி வைத்துவிட்டார்.
சென்னை ராஜா அண்ணாமலை புரத்தில் உள்ள நட்சத்திர ஓட்டலில் ‘இந்தியா டுடே’ சார்பில் நடைபெற்ற தமிழ்நாடு ரவுண்ட் டேபிள் நிகழ்ச்சி யில் முதலமைச்சர் ஸ்டாலின் பங்கேற்றார். இந்த நிகழ்ச்சியில் கூட்டணி ஆட்சி பற்றி நிருபர் கேட்ட கேள்விக்கு முதலமைச்சர் பதில் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–
கூட்டணியில் குழப்பம் என திட்டமிட்டு பரப்பப்படுகிறது. தி.மு.க. – காங்கிரஸ் இடையே குழப்பம் இல்லை. கூட்டணியில் குழப்பம் ஏற்படும் என மற்றவர்கள் நினைப்பது நடக்காது. தி.மு.க.– காங்கிரஸ் கூட்டணி 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெறுவோம்.
கூட்டணியில் ஏதாவது முறிவு ஏற்படுமா என்பதற்காக சிலர் சதி செய்கின்றனர். சிலரின் சதி பற்றி நாங்கள் கவலைப்படவில்லை. ஆட்சியில் பங்கு என்ற பேச்சே தற்போது எழவில்லை.
அரசியலை தாண்டி ராகுல் காந்தியை ஒரு சகோதரராக பார்க்கிறேன். அவரும் அப்படித்தான். தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் தொடர்ந்து இருக்கும். தி.மு.க.– காங்கிரஸ் இணைந்து தான் சட்டசபை தேர்தலை சந்திக்கும். 2021ம் ஆண்டு தேர்தலை விட 2026ம் ஆண்டு தேர்தல் கடினமாக இருக்கும் என்பது எதிர்க்கட்சிகள் மக்களை குழப்ப பேசும் பேச்சு. தற்போது வெற்றி மிக எளிதாக இருக்கும். ஏனென்றால்,முன்பு செய்வோம் என்று சொல்லி வந்தோம். தற்போது ஏராளமான சாதனைகளை செய்திருக்கிறாம்.
கலைஞர் ஒரு பழமொழி சொல்லி இருக்கிறார். உரிமைக்கு குரல் கொடுப்போம் உறவுக்கு கைகொடுப்போம் என்று கூறினார்.
அரசியலில் சுறுசுறுப்பாக இருக்க என்ன காரணம் என நிருபர் கேள்வி எழுப்பியதற்கு, அரசியலில் களம் புகுந்ததில் இருந்து தொடர்ந்து உழைத்து வருகிறேன். தினமும் உடற்பயிற்சி செய்கிறேன். கருணாநிதியிடம் இருந்து உழைப்பை கற்றுக் கொண்டேன், அதையே எனது மகனுக்கு கற்றுத் தருகிறேன். எதையும் எதிர்பார்க்காமல் உழைத்தால் தான் அரசியலில் முன்னுக்கு வர முடியும் என்று முதல்வர் பதில் அளித்தார்.
முன்னதாக நிகழ்ச்சியில் முதலமைச்சர் ஸ்டாலின் கூறியதாவது:–
தி.மு.க. கூட்டணிக்கு 42% ஆதரவு
தமிழ்நாடு டுடே எப்படி இருக்கிறது என்று பார்த்து, நாட்டு மக்களுக்கு எடுத்துச் சொல்ல வந்திருக்கக்கூடிய “இந்தியா டுடே”-வின் இந்த நிகழ்ச்சியில் பங்கெடுப்பதில் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்! பெருமைப்படுகிறேன்! தமிழ்நாட்டு மக்களின் மனதில் என்ன இருக்கிறது என்று இந்தியா டுடே-வும் சி-வோட்டர்ஸ் நிறுவனமும் நடத்திய சர்வேயில் தெளிவாக தெரிந்திருக்கும்! உங்கள் சர்வே படி, தி.மு.க. கூட்டணி 45 சதவிகிதம் ஆதரவோடு லீடிங்கில் இருக்கிறது!
எங்களுக்கும், Second Place-இல் இருக்கக்கூடிய வித்தியாசத்தைப் பார்த்தீர்கள் என்றால், 12 சதவிகிதம். இங்கே பத்திரிக்கையாளர்கள், அரசியல் ஆர்வலர்கள் என்று பலரும் இருக்கிறீர்கள். உங்களுக்கே தெரியும் Simple Arithmetic தான், மூன்று சதவிகிதம் வித்தியாசம் இருந்தாலே Clean Sweep தான்! 12 சதவிகிதம் என்றால், அது நிச்சயம் Thumping Victory தான்! அதில் எந்த மாற்றமும் இருக்காது. அதற்கென்று, நாங்கள் மெத்தனமாக இருக்க மாட்டோம்.
உங்களைப் பொறுத்தவரைக்கும், இந்த சர்வே ரிசல்ட், எங்களுக்கான பூஸ்ட்! அவ்வளவுதான். ஏனென்றால், தி.மு.க. என்பது, எப்போதும், என்றென்றும், மக்களுடன் இருக்கக்கூடிய இயக்கம்! மக்களுக்காக பாடுபடக்கூடிய இயக்கம்! அதனால், இன்னும் உற்சாகமாக உழைத்து, உங்களுடைய கணிப்பை உண்மையாக்குவோம்!
மீண்டும் தி.மு.க. ஆட்சி
கடந்த ஐந்தாண்டுகளுக்கு முன்பு தமிழ்நாடு என்ன நிலைமையில் இருந்தது என்று இங்கே இருக்கின்ற எல்லோருக்கும் தெரியும். அதேசமயம், இப்போது திராவிட மாடல் அரசு அமைந்து இந்த ஐந்தாண்டுகளில் வரலாறு காணாத வெற்றிப் பாதையில் தமிழ்நாடு வெற்றி நடைபோட்டுக் கொண்டிருக்கிறது! வரும் தேர்தலில் வென்று, இந்த வளர்ச்சிப் பயணத்தை வெற்றிப் பயணத்தை திராவிட மாடல் 2.0-விலும் தொடர்வோம்!
ஊடக நண்பர்கள் மற்றும் அரசியல் பார்வையாளர்களான உங்கள் முன்பு சில புள்ளிவிவரங்களை நான் முன்வைக்கிறேன். ஏனென்றால், கடந்த ஆண்டு தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி எவ்வளவு என்றால், 11.19 சதவிகிதம்! இந்த இரட்டை இலக்கு வளர்ச்சியை, கடைசியாக எப்போது அடைந்தோம் தெரியுமா? 14 ஆண்டுகளுக்கு முன்பு, அதுவும் தி.மு.க. ஆட்சியில்தான்! தமிழ்நாட்டிற்கு எதிராக செயல்படுவதிலும், தி.மு.க. அரசுக்கு குடைச்சல் கொடுப்பதிலும் கவனமாக இருக்கும் ஒன்றிய அரசாலேயே, இந்த வளர்ச்சியை மறைக்க முடியவில்லை; மறுக்க முடியவில்லை!
தமிழ்நாட்டின் GSDP எவ்வளவு? 17 லட்சத்து 23 ஆயிரத்து 698 கோடி ரூபாயாக உயர்ந்திருக்கிறது! தனி நபர் வருமானம் 3 லட்சத்து 58 ஆயிரம் ரூபாய்! தேசிய சராசரி சதவீதத்துடன் ஒப்பிட்டால் இது, 1.74 மடங்கு அதிகம்!
அடுத்து, இந்தியா முழுவதும் 50 சதவிகிதம், அரசு மேல்நிலைப் பள்ளிகளில்தான் Science Lab இருக்கிறது. இதுவே தமிழ்நாட்டில் 98.3 சதவிகிதம் பள்ளிகளில் Lab இருக்கிறது! N.I.R.F. தரவரிசையில், தலைசிறந்த நூறு கல்லூரிகளில், தமிழ்நாட்டைச் சேர்ந்த கல்லூரிகளின் எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா? 33. Top 50, State Universities-இல் 10 Universities தமிழ்நாட்டில்தான் இருக்கிறது!
நிதி ஆயோக் வெளியிட்ட S.D.G குறியீட்டில், 78 புள்ளிகளோடு, தமிழ்நாடு இரண்டாவது இடத்தில் இருக்கிறது! இப்படி, எந்த புள்ளிவிவரங்களை எடுத்துக்கொண்டாலும், தமிழ்நாடு ‘டாப்’இல் இருக்கிறது! அதனால்தான், 65-க்கு மேற்பட்ட ஒன்றிய அரசு விருதுகள் தமிழ்நாட்டை தேடி வருகிறது!
இப்படி ஏராளமான புள்ளிவிவரங்களை என்னால் பட்டியலிட முடியும்! இதையெல்லாம் சாதாரணமாக நாங்கள் சாதித்துவிடவில்லை. ஏராளமான மக்கள் நலத் திட்டங்களை செயல்படுத்தி, எதிர்காலத்திற்கான முதலீடுகளை செய்து, சாதனை செய்திருக்கிறோம்!
திராவிட மாடல் செயல்படுத்தும் திட்டங்களைப் பார்த்து, பல்வேறு மாநிலங்களில், அந்த திட்டங்களையும் கொண்டு வர வேண்டும் என்று, இங்கு வந்து பார்த்து செல்ல அதிகாரிகள் வருகிறார்கள். இப்போதுகூட, எங்களின் தோழி விடுதியை மாடலாக எடுத்துகொண்டு. ஒன்றிய அரசு பட்ஜெட்டில் ஒரு திட்டம் அறிவித்திருக்கிறார்கள்.
எல்லோருக்கும் தரமான மருத்துவத்தை கொண்டு சேர்க்க வேண்டும் என்று நாங்கள் உருவாக்கிய மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தை ஐ.நா. அமைப்பே விருது கொடுத்து பாராட்டியிருக்கிறது! நாங்கள் செய்வது எல்லாமே முன்னோடித் திட்டங்களாக மாறியிருக்கிறது!
ஒரு கோடியே 30 லட்சம் மகளிருக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் உரிமைத் தொகையாக வழங்குகிறோம்!
19 லட்சத்து 39 ஆயிரம் குழந்தைகளுக்கு காலை உணவும், அரசுப் பள்ளிகளில் படித்து, கல்லூரிக்கு செல்லும் மாணவிகளுக்கு புதுமைப்பெண் திட்டத்திலும், மாணவர்களுக்கு தமிழ்ப் புதல்வன் திட்டத்திலும் மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் என்று 12 லட்சம் பேருக்கு வழங்குகிறோம்!
நான் முதலமைச்சராக பொறுப்பேற்றதும், முதல் கையெழுத்தாக விடியல் பயணத்தை அறிமுகப்படுத்தினேன். அதில் இதுவரைக்கும் பெண்கள் 880 கோடி பயணங்களும், திருநர்கள் 48 இலட்சம் பயணங்களையும், மாற்றுத்திறனாளிகள் 7 கோடி பயணங்களையும் மேற்கொண்டிருக்கிறார்கள். இதனால், அவர்களுக்கு மாதந்தோறும் 800 ரூபாய் வரை மீதமாகிறது! இப்படி, இல்லம் தேடிக் கல்வி, எண்ணும் எழுத்தும், ஊட்டச்சத்தை உறுதிசெய், மக்களைத் தேடி மருத்துவம், இன்னுயிர் காப்போம்- நம்மைக் காக்கும் 48., நலன் காக்கும் ஸ்டாலின், பாதம் காப்போம், இதயம் காப்போம், கலைஞர் கனவு இல்லம், அன்புக் கரங்கள் திட்டம், அன்புச் சோலை திட்டம், தோழி விடுதி, குறு சிறு நிறுவனங்களுக்கு கடன் உத்தரவாத திட்டம், கலைஞரின் அனைத்துக் கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம், கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டம், உங்களுடன் ஸ்டாலின், கலைஞர் கைவினைத் திட்டம், மாற்றுத் திறனாளிகளுக்கான உரிமைத் திட்டம், உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத் திறனாளிகளுக்கு நேரடி நியமனம், முதலமைச்சர் கோப்பை, அயோத்திதாச பண்டிதர் குடியிருப்பு மேம்பாட்டுத் திட்டம், தொல்குடி திட்டம், டாக்டர் கலைஞர் விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் திட்டம், பேராசிரியர் அன்பழகனார் கல்வி உட்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டம், பெருந்தலைவர் காமராசர் கல்லூரி மேம்பாட்டுத் திட்டம், அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டம், முதலமைச்சரின் தாயுமானவர் திட்டம், முதலமைச்சரின் கிராமசாலை மேம்பாட்டுத் திட்டம், கல்லூரி மாணவர்களுக்கு மடிக்கணினித் திட்டம் என்று ஏராளமான திட்டங்களை செயல்படுத்திக் கொண்டிருக்கிறோம்! இவைகள் எல்லாம் மக்களிடம் பெரிய அளவில் சென்று அடைந்திருக்கிறது.
தி.மு.க. அரசு தொடர்ந்தால் தான், தமிழ்நாட்டின் எதிர்காலம் நன்றாக இருக்கும் என்று மக்கள் எங்கள் மீது நம்பிக்கை வைத்திருக்கிறார்கள். அந்த நம்பிக்கைக்கு என்றைக்கும் உண்மையாக இருக்க வேண்டும் என்றுதான் நாங்கள் உழைத்துக் கொண்டிருக்கிறோம்.
அதேசமயம், இவ்வளவு நன்மைகள் செய்யக்கூடிய தி.மு.க. அரசுக்கு ஒன்றிய பா.ஜ.க. அரசு எப்படியெல்லாம் நெருக்கடிகளை கொடுக்கிறது என்பதையும் மக்கள் கவனித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.
நிதிப்பகிர்வு, வரிப்பகிர்வு, சிறப்புத் திட்டங்கள், இரயில்வே திட்டங்கள் என்று எல்லாவற்றிலும் தமிழ்நாட்டிற்கு அநீதியையும் துரோகத்தையும்தான் செய்து கொண்டிருக்கிறார்கள்.
ஏன், இப்போது வெளியிட்ட பட்ஜெட்டில்கூட அவர்கள் தமிழ்நாட்டிற்கு செய்தது என்ன? தமிழ்நாட்டிற்கு நன்மை செய்வார்கள் என்று நம்பிதான் கோரிக்கைகள் வைக்கிறோம். ஆனால், பட்ஜெட்டில் தந்தது ‘ஜீரோ’தான்! இப்போது, தேசிய ஜனநாயக கூட்டணிக்கு அதே ஜீரோவை மக்களும் திருப்பித் தர போகிறார்கள். மக்கள் எல்லாவற்றையும் பார்த்துகொண்டுதான் இருக்கிறார்கள்.
நிர்வாக ரீதியாக இந்த அளவுக்கு இடைஞ்சல்கள் கொடுப்பது, ஆளுநரை வைத்தும், அவதூறுகள் பரப்பியும், அரசியல் ரீதியாக சீண்டிப் பார்க்கிறார்கள். ஊழல் கறை படிந்த அத்தனைபேரையும் ஒன்று சேர்த்துக்கொண்டு, பொய்களை பரப்பிகொண்டு, தேர்தலை சந்திக்க வருகிறார்கள். இந்த ஊழல் கூட்டணிக்கு பெயர் டபுள் எஞ்சின். அந்த டப்பா எஞ்சினுடைய இலட்சணத்தை டெல்லி, உத்தர பிரதேசம், பீகார் என்று பல மாநிலங்களில் பார்த்துகொண்டு தான் இருக்கிறோமே?
பா.ஜ.க.வைப் பொறுத்தவரைக்கும், வெறுப்பைப் பரப்பி, பிரச்சினைகளை உருவாக்கி, அதில் குளிர்காய வேண்டும் என்று நினைக்கிறார்கள்.
ஒரே ஒரு உதாரணத்தை சொல்கிறேன். தமிழ்நாட்டைப் போலவே, அஸ்ஸாமிலும் இப்போது தேர்தல் வரப்போகிறது. அதற்கு, அஸ்ஸாம் பி.ஜே.பி.யின் சோசியல் மீடியா பக்கங்களில் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்கள். நீங்கள் எல்லோரும் பார்த்திருப்பீர்கள். அதில், அந்த மாநிலத்தைச் சார்ந்த ஆளும் பா.ஜ.க. முதலமைச்சர் துப்பாக்கியில் குறி வைப்பது போல போட்டிருந்தார்கள். அதுவும் யாருக்கு எதிராக? இப்படிப்பட்ட காட்சியை வைப்பதற்கான துணிச்சல் அவர்களுக்கு எங்கிருந்து வந்தது.
ஜனநாயக இந்தியாவில், இப்படியெல்லாம் நடக்கும் என்று யாராவது நினைத்துப் பார்த்திருப்போமா… இந்த நிலைமையைதான் இந்தியா முழுவதும் ஏற்படுத்த வேண்டும் என்று அவர்கள் நினைக்கிறார்கள். அதற்கு அவர்களுக்கு துணையாக இருப்பது இரண்டு விஷயம். ஒன்று, அடிமைககள் – மற்றொன்று, அவதூறுகள்.
இதையெல்லாம் பயன்படுத்தி ஜனநாயகத்தின் அத்தனை விழுமியங்களையும் ஒழித்திடவேண்டும் என்று நினைக்கிறார்கள். அதற்கு நாட்டிலுள்ள ஜனநாயக சக்திகள் நிச்சயம் இடம் கொடுக்கக் கூடாது. தமிழ்நாட்டிற்கு சேரவேண்டிய நிதியையும், நீதியையும் நிச்சயமாக நாங்கள் பெற்றுத் தருவோம். பாஜக-வின் பாசிச அரசியல் தமிழ்நாட்டில் நிச்சயம், நிச்சயம், நிச்சயமாக அது எடுபடாது! நிறைவேறாது!
திராவிட மாடல் 2.O-வில் தமிழ்நாட்டை காத்து இந்தியாவின் நம்பர்-1 மாநிலமாக தொடர்ந்து வளர்த்தெடுப்பது நிச்சயம்!
தமிழ்நாடு வெல்லும்! இந்தியாவிற்கே வழிகாட்டும்!
இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.