புதுச்சேரி:
திமுக- அதிமுக வெவ்வேறு கட்சிகள் அல்ல. இரண்டும் ஒரே கட்சித்தான். இலவசத்தை கொடுத்து மக்களின் ஆசையை தூண்டி ஏமாற்றி வருகின்றனர் என்று சீமான் குற்றம்சாட்டியுள்ளார்.
புதுச்சேரியில் உள்ள தனியார் ஓட்டலில் நாம் தமிழர் கட்சி சார்பில் தேர்தல் அறிக்கையை அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று வெளியிட்டார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: திமுக – அதிமுக வெவ்வேறு கட்சி என்று நினைப்பது போல ஒரு அறிவற்றத்தனம் எதுவும் இல்லை. இரண்டும் ஒரே கட்சி தான்.
காங்கிரஸ் – பாஜக, திமுக – அதிமுக ஆகிய கட்சிகளின் கொடியில் வண்ணம் மாறும் அவர்களின் கொள்கையில் எண்ணம் மாறாது. வெவ்வேறு கட்சி என்று நினைத்தால் அது தவறு.
இவர்கள் எல்லோருமே இலவசத்தை கொடுத்து மக்களின் ஆசையை தூண்டி ஏமாற்றி வருகின்றனர்.
கள்ளச் சாராயம் குடித்து இறந்தால், நடிப்பவரை பார்க்க வந்து நெரிசலில் இறந்தால் ரூ.10 லட்சம். எல்லையில் போராடி நாட்டை காக்க இறக்கும் ராணுவ வீரரருக்கு ஒத்த ரூபாய் இல்லை. இது நாடா?.
புதுச்சேரியில் காங்கிரஸ் பல ஆண்டுகள் ஆட்சி செய்திருக்கிறது. பாஜக அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் இருக்கிறார்கள். இந்த மண்ணுக்கு ஒரு மாநில உரிமையை பெற்று தர முடியவில்லை. கேரளாவில் மாஹே, ஆந்திராவில் ஏனாம் என தொகுதி வைத்திருக்கிறீர்கள். அங்கு நான் போய் நிற்க முடியவில்லை. அந்த மண் சார்ந்தவர்கள் தான் நிற்கிறார்கள்.
அந்த இரண்டு தொகுதிக்கும் அமைச்சர் கொடுத்துவிடுகிறீர்கள். அவர்கள் உள்துறை, வருவாய்த் துறை எடுத்துக் கொள்கிறார்கள்.
பிரதமர் மோடி, அமித் ஷா, ராகுல் காந்தி வருகிறார்கள். அவர்கள் பிரச்சினையை தவிர வேறு என்ன தருகிறார்கள்.
மக்களை ஏமாற்றி வாக்கை பறிக்க மட்டுமே திட்டமிட்டால் எப்படி நல்ல ஆட்சியாளனாக இருக்க முடியும்.
காவிரி நீரை பெற்று தருவதில் காங்கிரஸ், ராகுல் காந்தியின் நிலைப்பாடு என்ன ? இங்குள்ள பாஜக தலைவரின் கருத்து என்ன ? நான் மட்டும் இந்தியனாக இருக்க வேண்டும். அவர்கள் கன்னடனாகவும், மலையாளியாகவும் இருப்பார்களா?.
ஒரு நதி நீர் பகிர்வில் உரிய ஒதுக்கீட்டை பெற்று தராத பாஜகவுக்கு எதுக்கு ஓட்டுப் போட வேண்டும். எத்தனை முறை காங்கிரஸ் ஆட்சியில் முதல்வராக ரங்கசாமி இருந்திருக்கிறார். ஆனால், நாங்கள் மாஹே, ஏனாம் வேண்டாம், மாநில உரிமை வேண்டும் என்று முன்வைத்த பிறகு மாநில உரிமை கொடுங்கள் என்று ரங்கசாமி கேட்கிறார்.
இத்தனை பிரச்னையை தந்தது யார் ? இந்த ஆட்சியாளர்கள் தான். காங்கிரஸுக்கு நேர் எதிர் கோட்பாடு பாஜக என்கிறார்கள். பாஜகவுக்கு நேர் எதிர் கோட்பாடு காங்கிரஸ் என்கிறார்கள்.
காமராஜரின் வாரிசு எனக் கூறும் ரங்கசாமி, எப்படி பாஜகவுடன் கூட்டணி வைக்கிறார். ஒரே மொழி இந்தியை ஏற்கிறாரா ?
அல்லது மும்மொழி கொள்கையை ஏற்கிறாரா ? இந்துக்கள் நாடு இந்தியா என்பதை ஏற்கிறாரா ? இந்த கொள்கையில் உடன்படுகிறாரா ? மத்தியிலும், மாநிலத்திலும் ஒரே ஆட்சி இருந்து தீர்த்த பிரச்சினை என்ன? மாநிலங்கள் கொடுக்கும் வரி வருவாய் தான், மத்திய அரசுக்கு கிடைக்கும் நிதி.
ஒரே ஆட்சி இருந்தால் தான் நிதியை கொடுப்பேன் என்பது எவ்வளவு பெரிய கொடுங்கோல் ஆட்சி.
எனக்கு உடன்பட்டால் தான் நிதி கொடுப்பேன் என்றால், அதற்காகவே அவர்களை ஒழிக்க வேண்டும். நான் கொடுத்த நிதியை வைத்துக் கொண்டு தட்டை ஏந்து பிச்சை போடுகிறேன் என்றால் அவர்களை ஒழிக்க வேண்டும்.
என்னை வரிக்காகவும், வாக்குக்காவும், நிலத்தின் வளத்துக்காகவும் தான் வைத்திருக்கிறாய்.
அவர்களுடன் கூட்டணி வைத்தால் தான் நமக்கு எல்லாம் தருவார்கள் என்பது கையாளாகத் தனம். வருமான வரித்துறை ரெய்டு நடத்திய இடங்களில் பாஜக பேரம் பேசி பணம் வாங்கவில்லையா ? வெளிப்படையான நிர்வாகம் எங்கே ?
2050-க்குள் புதுச்சேரியை சிங்கப்பூராக மாற்றுவேன் என்று பாஜகவுடன் சேர்ந்துள்ள எல்ஜேகே கட்சி தலைவர் ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் கூறி இருக்கிறார்.
அவர் தனியாக நின்றிருந்தால் பரவாயில்லை. ஏற்கெனவே உள்ள திருடனுடன் சேர்ந்ததால், அவர்கள் சார்லஸைத்தான் ஒழிப்பார்கள். திருட்டை ஒழிக்க முடியாது.
யாருடனும் நான் சேர மாட்டேன். என்னுடைய கொள்ளையில் தெளிவு உள்ளது. குழப்பம் இல்லாமல் முடிவு எடுப்பேன்.
அடுத்தவன் கால்களை நம்பி ஜோஸ் சார்லஸ் மாாட்டின் பயணம் இருக்கக் கூடாது. என்.ஆர்.காங்கிரஸ் 2 சீட் வாங்கிவிட்டு புதுச்சேரியை எப்படி சிங்கப்பூராக மாற்ற முடியும். தனியாக நின்று தோற்று, தோற்று தன்னுடைய தத்துவத்தை மக்களிடம் விதைக்க வேண்டும்” என்றார்.
அப்போது, காமராஜருக்கு மெரினா கடற்கரையில் அடக்கம் செய்ய கருணாநிதி அனுமதி கொடுக்கவில்லை என்று எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியிருந்தது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர், அதற்கு சீமான், “அது குற்றச்சாட்டு இல்லை. வரலாற்று உண்மை. காமராஜர் பேரன் நான் வந்தால் சமாதியை உடைத்து எடுப்பேன்.
கடற்கரையை ஆக்கிரமித்து ரூ.300 கோடிக்கு 8 ஏக்கரில் சமாதி கட்டி படுக்கின்ற அளவுக்கு நீங்கள் ஒன்றும் சாதிக்கவில்லை.
என்ன செய்துவீட்டீர்கள். முதலில் யார் நீங்கள்? இந்த நாட்டை நாசமாக்கியவர் தானே. இந்த நாட்டின் முதல்வர்களின் கல்லறை கடற்கரையில் இருக்கிறதா?
தன்னுடைய ஆட்சியில் நடந்த ஊழல் உள்ளிட்டவற்றை முதல்வர் ஒப்புக்கொள்வாரா ? அவருக்கு வேண்டுமானால் தெரியாமல் இருக்கலாம். நாங்கள் படிக்கின்றோம் எங்களுக்கு என்ன நடந்தது என்று தெரியும்” என்று சீமான் கூறினார்.