மனைவி ராதிகாவை பைக்கில் பின்னால் அமர வைத்துக்கொண்டு பிரச்சார ரைடு சென்ற சரத்குமாரின் வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது.
நாடு முழுவதும் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. வருகிற 19ஆம் தேதி தொடங்கி ஜூன் ஒன்றாம் தேதி வரை தேர்தல் நடைபெறும் நிலையில் தமிழ்நாட்டில் 39 தொகுதிகள், புதுச்சேரி என மொத்தம் 40 தொகுதிகளில் வரும் 19ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. மக்களவைத் தேர்தலை ஒட்டி அரசியல் கட்சித் தலைவர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்த வகையில் விருதுநகர் தொகுதி பாஜக வேட்பாளராக களமிறக்கப்பட்டுள்ள ராதிகா சரத்குமாரை ஆதரித்து அவரது கணவர் சரத்குமார் தீவிர பரப்புரை மேற்கொண்டு வருகிறார். பொதுக்கூட்டங்களில் கலந்து கொண்டு மோடியின் ஆட்சி குறித்து புகழ்ந்து பேசி வரும் இவர்கள், திராவிட கட்சிகள் ஊழல் நிறைந்ததாக கூறி பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று ராதிகா சரத்குமார் தனது கணவர் சரத்குமார் உடன் பைக்கில் அமர்ந்தவாறு பல்வேறு தெருக்களுக்கு சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார் .
இந்த வீடியோவை பார்த்த சிலர் ஹெல்மெட் அணிய வேண்டும் என்று வலியுறுத்திய நிலையில், ஹெல்மெட் அணிந்து சென்றால் வேட்பாளர் யார் என்று எப்படி தெரியும்? என்று அவர்களுக்கு ஆதவராக சிலர் கமெண்ட் செய்து வருகின்றனர்.