சிதம்பரத்தில் பாஜக வேட்பாளர் கார்த்தியாயினியை ஆதரித்து மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று பரப்புரை மேற்கொண்டார். அப்போது பேசிய அவர் , தேர்தல் நேரத்தில் நிறைய கூட்டங்கள் நடக்கும் நிறைய வாக்குறுதிகள் அளிப்பார்கள். ஆனால் மக்கள் மத்தியில் வாக்குறுதி அளிப்பதற்கு தைரியம் வேண்டும்.
அது எப்போது வரும் என்றால் நான் வெற்றி பெறுவேன் என்று நம்பிக்கை இருக்கும் போது தான் வரும் . கடந்த 10 ஆண்டுகளில் நாட்டுக்கு மட்டுமல்ல குஜராத் முதல்வராக கொடுத்த வாக்குறுதியையும் நிறைவேற்றி கொடுத்தவர் பிரதமர் மோடி. தமிழ்நாட்டிற்கு நிறைய திட்டங்களை மோடி அளித்துள்ளார் . அவர் செயல்படுத்திய திட்டங்களை சொல்ல விரும்புகிறேன்.
சிதம்பரம் தொகுதி முந்திரிக்கு பெயர் போனது. இங்கு பெண்கள் அதிக அளவில் பங்கு செய்கிறார்கள். முந்திரிக்கு சரியான விலை கிடைக்கிறதா என பார்த்து வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்ய முடியும்.
ஆட்சியில் உள்ளவர்களின் தொகுதிக்கு ஒன்றும் செய்யவில்லை ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசியல் அங்கம் வகித்த திமுகவும் வேறு கட்சிகளும் இப்பகுதியின் வளர்ச்சிக்காக எதுவும் செய்யவில்லை. வெளிநாட்டில் கூட பிரபலமாக இருந்த அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் அரசு கையில் எடுத்துக்கொண்டு சீரழித்து விட்டது. அதை பார்க்கும் போது வேதனையாக உள்ளது.
திமுக அங்கம் வகித்துள்ள ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஊழலுக்கு பெயர் போனது. அப்படி ஒரு ஊழலை கற்பனை கூட நாம் பார்த்திருக்க முடியாது. அலைக்கற்றை ஊழல், நிலக்கரி ஊழல் என ஒவ்வொரு துறையிலும் ஊழல் செய்கிறார்கள். இதனால் நாடு சீர்குலைந்து போய்விட்டது. சீர்குலைந்த நாடுகளின் பட்டியலுக்கு இந்தியாவை கொண்டு சென்று விட்டனர். ஆனால் மோடி 10 வருடமாக போராடி அதை சரி செய்துள்ளார் என்று பேசினார்.
ஆனால் அப்போது கூட்டத்தில் இருந்தவர்கள் அங்கிருந்து புறப்பட தயாராகினர். இதனால் எரிச்சலடைந்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாய்மார்களே போகாதீங்க; இரண்டு நிமிஷம் உட்காருங்கள் முடிச்சிடுறேன் என்று சொல்லிக் கொண்டே தனது பேச்சு தொடர்ந்தார்.