தஞ்சாவூர் பெரிய கோவில் உலக புகழ் பெற்றது. மாமன்னர் ராஜராஜசோழனால் கட்டப்பட்ட பெரிய கோவில் ஆயிரம் ஆண்டுகளை கடந்தும் கம்பீரமாக காட்சியளிக்கிறது.
சிறந்த சுற்றுலா தலம், ஆன்மீக தலமாக விளங்கும் பெரிய கோவிலுக்கு தினமும் தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலம், வெளிநாடுகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள், சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.
பல்வேறு சிறப்புகள் வாய்ந்த பெரியகோவிலில் ஆண்டுதோறும் பல்வேறு விழாக்கள் நடைபெறும். அதில் 18 நாட்கள் வெகுவிமரிசையாக நடைபெறும் சித்திரை பெருவிழா பிரசித்தி பெற்றது.
அதன்படி, இந்த ஆண்டுக்கான சித்திரை பெருவிழா கடந்த 13-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
தொடர்ந்து, காலை, மாலை வேளைகளில் சுவாமி- அம்பாள் புறப்பாடு ராஜவீதிகளில் நடைபெற்றது. மாலையில் கலைநிகழ்ச்சிகள் நடந்து வருகிறது.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று (திங்கள்கிழமை) காலை நடைபெற்றது.
தேரோட்டத்தை முன்னிட்டு அதிகாலை 5 மணிக்கு தியாகராஜர், கமலாம்பாள், விநாயகர், நீலோத்பலாம்பாள், வள்ளி, தெய்வானை உடனுறை சுப்பிரமணியர், சண்டிகேஸ்வரர் ஆகிய பஞ்சமூர்த்திகள் முத்துமணி அலங்காரத்தில் கோவிலில் இருந்து புறப்பட்டு, மேலவீதியில் உள்ள தேர்நிலை மண்டபத்துக்கு வந்தடைந்தனர்.
பின்னர், அலங்கரிக்கப்பட்ட தேரில் எழுந்தருளிய தியாகராஜர், கமலாம்பாளுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
இதையடுத்து காலை 6.15 மணிக்கு திருத்தேர் வடம் பிடிக்கப்பட்டது. தேரோட்டத்தை மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம், முதன்மை மாவட்ட நீதிபதி வேல்முருகன், போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவதனம், தஞ்சை ராமகிருஷ்ணா மடத்தின் தலைவர் சுவாமி வீமூர்த்தானந்தர், தருமபுரம் ஆதீன கட்டளை தம்பிரான் சுவாமிகள், அரண்மனை பரம்பரை அறங்காவலர் பாபாஜி ராஜாபோன்ஸ்லே, மாநகராட்சி முன்னாள் மேயர் சண்.ராமநாதன், மாநகராட்சி துணை மேயர் அஞ்சுகம் பூபதி, சதய விழாக்குழு தலைவர் செல்வம் உள்ளிட்ட பலர் வடம் பிடித்து தொடங்கி வைத்தனர்.
தொடர்ந்து, தேருக்கு முன்பாக விநாயகர், சுப்பிரமணியர் சப்பரங்களும், பின்னால் நீலோத்பலாம்பாள், சண்டிகேஸ்வரர் சப்பரங்களும் பின் தொடர்ந்து செல்ல தியாகராஜர்- கமலாம்பாள் எழுந்தருளிய தேர் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வெள்ளத்தில் அசைந்தாடி சென்றது.
‘ஆரூரா, தியாகேசா’ என்ற பக்தி முழக்கத்துடன் பக்தர்கள் வடம் பிடித்து தேரை இழுத்து சென்றனர்.
பக்தர்களின் பக்தி கோஷம் விண்ணை முட்டியது. தேரானது 4 ராஜவீதிகளில் அசைந்தாடி சென்ற காட்சி பக்தர்களை மெய்சிலிர்க்க வைத்தது. தேருக்கு முன்னால் கோலாட்டம், ஒயிலாட்டம் உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டன.
மொத்தம் 14 இடங்களில் நிறுத்தப்பட்டு சிறப்பு தீபாராதனை காண்பிக்கப்பட்டு, அர்ச்சனை நடைபெற்றது.
பக்தர்கள் தேங்காய், பழம் கொடுத்து அர்ச்சனை செய்தனர். பல்வேறு வழியாக சென்று பிற்பகலில் தேர் நிலையை வந்தடைந்தது.
தேரோட்ட விழாவில் தஞ்சை மாவட்டம் மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள், வெளிமாநிலங்களில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவதனம் உத்தரவின்படி ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். நடமாடும் மருத்துவ குழுவினரும், தீயணைப்பு துறை வாகனமும் தேரை பின்தொடர்ந்தவாறு சென்றது.
பெரிய கோவில் தேரோட்டத்தை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் திரண்டதால் தஞ்சை மாநகரமே விழாக்கோலம் பூண்டது.