தமிழ் புத்தாண்டை முன்னிட்டு திருவண் ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் தங்க தேர்!!

திருவண்ணாமலை:
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்குகிறது. இந்த கோவிலுக்கு தினமும் உள்ளூர் மட்டுமின்றி வெளி மாவட்டங்கள், வெளிமாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்துவிட்டு செல்கின்றனர். விழா நாட்களிலும், விடுமுறை நாட்களில் இக்கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும்.

இந்த நிலையில் சித்திரை மாதம் 1-ம் நாளான நேற்று தமிழ் புத்தாண்டை முன்னிட்டு அருணாசலேஸ்வரர் கோவிலில் அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டது. அருணாசலேஸ்வரருக்கும், உண்ணாமலை அம்மனுக்கும் சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடந்தது.

பின்னர் சிறப்பு அலங்காரத்தில் சாமியும், அம்மனும் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். தமிழ் புத்தாண்டையொட்டி மூலவருக்கும், சம்பந்த விநாயகருக்கும் வெள்ளி கவச அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

பஞ்சாங்கம் வாசித்தல்

மேலும் அருணாசலேஸ்வரர் கோவிலில் வழக்கப்படி பால் பெருக்கு நிகழ்ச்சியும், 3-ம் பிரகாரத்தில் உள்ள சம்பந்த விநாயகர் சன்னதி முன்பு நடப்பு தமிழ் ஆண்டுக்கான பஞ்சாங்கம் வாசித்தல் நிகழ்ச்சியும் நடந்தது. கோவில் சிவாச்சாரியார்கள் சம்பந்த விநாயகர் சன்னதியில் சிறப்பு பூஜை செய்து பஞ்சாங்கத்தை வாசித்து இந்த ஆண்டுக்கான அருணாசலேஸ்வரர் கோவில் விழா நிகழ்ச்சிகளை அறிவித்தனர்.

நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலையத்துறை மண்டல இணை ஆணையர் சுதர்சன், கோவில் அறங்காவலர் குழுத்தலைவர் ஜீவானந்தம், அறங்காவலர் குழு உறுப்பினர்கள் ராஜாராம், கோமதி குணசேகரன், சினம் பெருமாள் மற்றும் கோவில் அலுவலர்கள், பணியாளர்கள், பக்தர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் தமிழ் புத்தாண்டையொட்டி நகரத்தார் சார்பில் கோவில் வளாகத்தில் தங்க தேர் இழுக்கப்பட்டது. இதில் உண்ணாமலை அம்மன் சமேத அருணாசலேஸ்வரர் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி உலா வந்தனர். மேலும் கோவிலில் பக்தர்கள் விரைந்து சாமி தாிசனம் செய்ய சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது.

பக்தர்கள் அதிகாலை முதலே நீண்ட வரிசையில் சென்று சாமி தரிசனம் செய்தனர். தமிழ் புத்தாண்டு பிறப்பை முன்னிட்டு நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் நேற்று இரவு வரை பக்தர்கள் பலர் கோவில் பின்புறம் உள்ள மலையை சுற்றி கிரிவலம் சென்றனர். நேற்று கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் பக்தர்கள் கிரிவலம் சென்றனர்.

ஆரணி

ஆரணி நகரில் பழைய பஸ் நிலையம் அருகே உள்ள அரியாத்தம்மன் கோவிலில் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு சப்த மாதாக்களுக்கும், அரியாத்தம்மனுக்கும் சிறப்பு அபிஷேகம், மகா அலங்காரம், மகா தீபாராதனை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

இதேபோல புதுக்காமூர் பகுதியில் உள்ள குழந்தை வரம் அருளும் பெரியநாயகி சமேத புத்திர காமேட்டீஸ்வரர் சிவன் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. மேலும் வரதராஜ பெருமாள் கோவில், பாப்பாத்தி அம்மன் கோவில், ஆண்டாள் அம்மன் கோவில், கொசப்பாளையம் முத்து மாரியம்மன் கோவில், பாலசுப்பிரமணிய சுவாமி கோவில், பூமிநாதர் கோவில் உள்பட அனைத்து கோவில்களிலும் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

மேலும் நகராட்சி அருகே உள்ள வீரஆஞ்சநேயர் கோவில் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு லட்சதீப விழா நடந்தது. இதில் திரளான பக்தர்கள் அகல் தீபம் ஏற்றி லட்சதீப வழிபாடு செய்தனர்.

போளூர்

தமிழ் புத்தாண்டை முன்னிட்டு போளூரில் உள்ள கைலாசநாதர் கோவில், சோமநாத ஈஸ்வரர் கோவில், நற்குன்று பாலமுருகன் கோவில், குன்னத்தூர் தண்டபாணி முருகர் கோவில் ஆகிய கோவில்களில் சாமிக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம், ஆராதனை செய்யப்பட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

இதேபோல் சந்தவாசல் அருகே கிருஷ்ணாபுரத்தில் உள்ள ஸ்ரீதேவி பூதேவி சமேத பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவிலில் சாமிக்கு திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது. இதை முன்னிட்டு சாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *