திருப்பத்தூர்:
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே பிள்ளையார்பட்டியில் பிரசித்தி பெற்ற கற்பக விநாயகர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் தமிழ்ப்புத்தாண்டு தினத்தையொட்டி சிறப்பு அலங்காரம் மற்றும் சிறப்பு பூஜைகளும், கோவில் திருக்குளத்தில் தீர்த்தவாரி உற்சவமும் நடைபெறுவது வழக்கம்.
அதேபோல நேற்று தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு அதிகாலை 4.30 மணிக்கு நடை திறக்கப்பட்டு திருவனந்தால் பூஜை நடைபெற்றது. தொடர்ந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
அதைத்தொடர்ந்து மூலவர் கற்பகவிநாயகர் தங்க கவசத்திலும், உற்சவர் தங்க மூஷிக வாகனத்திலும் அருள்பாலித்தனர். காலை 9.30 மணிக்கு அங்குச தேவர் மற்றும் அஸ்திர தேவர் புறப்பாடாகி கோவில் திருக்குளத்தில் எழுந்தருளினர்.
தீர்த்தவாரி உற்சவம்
அங்கு பிள்ளையார்பட்டி பிச்சைக்குருக்கள் தலைமையில் அங்குச தேவர் மற்றும் அஸ்திர தேவருக்கு பால், பன்னீர், இளநீர், திருமஞ்சனம் உள்ளிட்ட பல்வேறு திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் ஸ்ரீதர் குருக்கள் அங்குச தேவர் மற்றும் அஸ்திர தேவரை எடுத்துச் சென்று திருக்குளத்தில் 3 முறை மூழ்கி தீர்த்தவாரி உற்சவத்தை நடத்தினார். தொடர்ந்து அங்கு நின்ற பக்தர்களுக்கு புனிதநீர் தெளிக்கப்பட்டது.
இரவு 7 மணிக்கு மூலவர் சன்னதி முன் மண்டபத்தில் சிவாச்சாரியார்கள் புதிய புத்தாண்டிற்கான பஞ்சாங்கம் வாசிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
மேலும் பக்தர்களுக்கு உணவு, குடிநீர், மருத்துவம் உள்ளிட்ட வசதிகள் செய்யப்பட்டிருந்தது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் பரம்பரை அறங்காவலர்கள் காரைக்குடி ராம.மெய்யப்பன் செட்டியார், பூலான்குறிச்சி சுப.முத்துராமன் ஆகியோர் செய்திருந்தனர்.