தமிழகத்திற்கு யார் நன்மை செய்வார்கள் என பார்த்து அவர்களுக்கு தான் எங்கள் ஆதரவு தருவோம் என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார்.
மதுரை மீனாட்சி பெண்கள் கல்லூரியில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு மற்றும் அவர் குடும்பத்தினர் ஆகியோர் வாக்களித்தனர்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசிய செல்லூர் ராஜுவிடம் தேர்தலுக்கு பின்னர் அதிமுக தங்களிடம் வந்து விடும் என ஓ.பி.எஸ். தெரிவித்தது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், பலாப்பழத்தை தேடி ஈக்கள் வேண்டுமானால் வரும். ஒரு அதிமுக தொண்டன் கூட வர மாட்டான், எனக் கூறினார்.
தொடர்ந்து, பாஜக 400 சீட் வெல்லுமா என்ற கேள்விக்கு, “ஹா ஹா ஹா… ஆண்டவனுக்கு தான் வெளிச்சம். தமிழக மக்கள் அதிமுக கூட்டணிக்கு ஆதரவு அளித்துள்ளார்கள். தமிழர்களின் உரிமை மீட்பதும், பலத்தை காப்பாற்றுவதும் அதிமுகவின் கொள்கை.
இந்தியா கூட்டணியில் கூட யார் பிரதமர் வேட்பாளர் என கூறவில்லை. பாஜக கூட்டணியில் தான் மோடி பிரதமர் வேட்பாளர் என கூறுகிறார்கள். பாஜகவிற்கு மேலாக ஒரு தலைமை உள்ளது. அவர்கள் மோடி பிரதமரா என இன்னும் கூறவில்லை.
பாஜக விதிகளின்படி இரண்டு முறைக்கு மேல் பிரதமராக பதவி வைக்க முடியாது எனக் கூறுவார்கள். தேர்தலுக்குப் பின்னரே யார் பிரதமர் என தெரியவரும். மக்கள் தான் எஜமானர்கள், மக்கள் முடிவு செய்பவர்கள் தான் பிரதமராக வர முடியும்.
தமிழகத்திற்கு யார் நன்மை செய்வார்கள் என பார்த்து அவர்களுக்கு தான் எங்கள் ஆதரவு தருவோம். தமிழ்நாடு என்பது திராவிட பூமி. ஆகவே திமுக கூட்டணி மற்றும் அதிமுக கூட்டணிக்கு இடையே மட்டுமே போட்டி நிலவுகிறது, எனக் கூறினார்.