சென்னை:
ஸ்ரீவைகுண்டத்தில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட பெண்ணுக்கு நீதி கிடைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று பேரவை எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி ஆகியோர் வலியுறுத்தினர்.
இது தொடர்பாக அவர்கள் வெளியிட்ட அறிக்கைகளில் கூறியிருப்பதாவது:
உதயநிதி ஸ்டாலின்: ஸ்ரீவைகுண்டத்தில் முதல்வர் விஜய்யின் ரசிகை ஒருவர், ஸ்ரீவைகுண்டம் தவெக எம்எல்ஏ சரவணனுக்கு நெருக்கமான கட்சி நிர்வாகிகள் இருவரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ள சம்பவம் தமிழக பெண்களை கொதிப்படையச் செய்துள்ளது.
மேலும், ‘அமைச்சர் ஆனந்திடம் பேசி உனக்கு வேலை வாங்கி தருகிறேன்’ என்று எம்எல்ஏ சரவணன் சமரசம் பேச முயன்றதாகவும், இதேபோல் இன்னொரு பெண்ணும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், ‘எல்லாம் மேலிடத்துக்கு தெரியும்’ என்று குற்றவாளிகள் கூறியதாகவும் பாதிக்கப்பட்ட பெண் தெரிவித்துள்ளார்.
யார் அந்த மேலிடம்? அதுமட்டுமில்லாமல், பாதிக்கப்பட்ட பெண்ணை கட்சியிலிருந்து நீக்கியுள்ளனர்.
‘பாலியல் வன்கொடுமை செய்திகளை கேட்கும் போதெல்லாம் நெஞ்சம் கலங்குகிறது’ எனப் பேசிய முதல்வர், தன் கட்சியைச் சேர்ந்த ஆட்களே பாலியல் வன்கொடுமை செய்தால், பாதிக்கப்பட்ட பெண் மீதே நடவடிக்கை எடுக்கிறார்.
உண்மையிலேயே பெண்கள் பாதுகாப்பில் முதல்வருக்கு அக்கறை இருக்கிறதா? ரீல்ஸ் எடுத்து பதிவிடத் தான் சிங்கப்பெண் பிரிவை முதல்வர் உருவாக்கினாரா? ஸ்ரீவைகுண்டத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நீதி கிடைக்க வேண்டும்.
குற்றவாளிகளுக்கு ஆதரவாகச் செயல்பட்ட எம்எல்ஏ சரவணன் உடனடியாக பதவியிலிருந்து நீக்கப்பட வேண்டும். அவருக்கு ஆதரவாக இருந்த ஆளுங்கட்சி மேலிடம் யாரென விசாரிக்க வேண்டும்.
பழனிசாமி: ஸ்ரீவைகுண்டத்தில் பெண் ஒருவர், ஸ்ரீவைகுண்டம் தவெக எம்எல்ஏ ஆதரவுடன் கட்சி நிர்வாகிகளால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது.
இதை மறைக்க, தவெக எம்எல்ஏவே அந்த பெண்ணிடம் சமரசம் பேசியதாகவும் செய்திகள் வருகின்றன.
சிங்கப்பெண் அதிரடிப் படைக்கான முதல் வழக்கே ஆளுங்கட்சி வழக்கா? அதுவும் ஓர் ஆளுங்கட்சி எம்எல்ஏ இப்படிப்பட்ட செயலுக்கு சமரசம் பேசுவதை இன்றைய முதல்வர் ஏற்றுக்கொள்கிறாரா?
மேலும், ‘அமைச்சருக்குத் தெரியும், மேலிடத்துக்கு தெரியும்’ என்றெல்லாம் பேச்சுகள் வருகின்றன. யார் அந்த மேலிடம்?
தொடக்க விழாவில் சிங்கிள் டேக்கிள் பேசிய வசனங்களை எல்லாம், உங்களது கட்சியினரைப் பார்த்து பேசுங்கள் முதல்வரே.
பாலியல் வன்கொடுமைக்கு சமரசம் பேசி மறைக்க முயன்ற உங்கள் கட்சி எம்எல்ஏ-வை பதவி ராஜினாமா செய்ய வைத்து கைது செய்ய வேண்டும்.
பெண்ணுக்கு, உங்கள் ஆட்சியில், உங்கள் கட்சியினரால் நடைபெற்றுள்ள இந்த கொடுமைக்கு பதில் சொல்ல வேண்டிய உங்களது கடமை.
இந்த வழக்கில் குற்றத்துக்கு துணை போனவர் எம்எல்ஏ, அமைச்சர் என யாராக இருந்தாலும், கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.