மும்பை:
நடப்பு ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் லீக் ஆட்டத்தில் இங்கிலாந்து அணியை ஆல் அவுட் செய்து அசத்தியது மேற்கு இந்தியத் தீவுகள் அணி.

‘குரூப்-சி’ பிரிவில் இடம்பெற்றுள்ள இந்த இரு அணிகளுக்கு இடையிலான ஆட்டம் நேற்று மும்பையில் உள்ள வான்கடே கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது.
டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்து வீச முடிவு செய்தது. முதலில் பேட் செய்த மேற்கு இந்தியத் தீவுகள் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 196 ரன்கள் எடுத்தது.
பவர்பிளே ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 55 ரன்கள் எடுத்திருந்தது மேற்கு இந்தியத் தீவுகள் அணி. ஹோப், பிராண்டன் கிங், ஹெட்மயர் ஆகியோர் விக்கெட்டை இழந்திருந்தனர்.
அந்த சூழலில் ரூதர்போட் களம் கண்டார். 42 பந்துகளில் 76 ரன்கள் விளாசிய அவர் இறுதிவரை ஆட்டமிழக்கவில்லை. சேஸ் 34, ஹோல்டர் 33, ஹெட்மயர் 23 ரன்கள் எடுத்தனர்.
இங்கிலாந்து சார்பில் சிறப்பாக பந்து வீசிய ரஷீத், 4 ஓவர்களில் 16 ரன்கள் மட்டும் கொடுத்து 2 விக்கெட்டுகளை கைப்பற்றி இருந்தார். ஓவர்டன் 2, சாம் கரண் மற்றும் ஆர்ச்சர் தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.
197 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை இங்கிலாந்து அணி விரட்டியது. பிலிப் சால்ட் 14 பந்துகளில் 30 ரன்கள் விளாசினார். அதன் மூலம் இங்கிலாந்து அணி இலக்கை விரட்டுவதில் வேகம் காட்டியது.
பட்லர் 21, டாம் பேன்டன் 2, ஜேக்கப் பெத்தல் 33 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். 10 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 93 ரன்கள் எடுத்திருந்தது இங்கிலாந்து அணி.
அதன் பின்னர் சீரான இடைவெளியில் இங்கிலாந்து அணி விக்கெட்டுகளை இழந்தது. மறுபக்கம் சாம் கரண் இறுதிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். 30 பந்துகளில் 43 ரன்களை அவர் எடுத்தார்.
19 ஓவர்களில் 166 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது இங்கிலாந்து. இதன் மூலம் 30 ரன்களில் மேற்கு இந்தியத் தீவுகள் அணி வெற்றி பெற்றது.
அந்த அணியின் சுழற்பந்து வீச்சாளர்களான மோட்டி 3, ரோஸ்டன் சேஸ் 2, ஹோசைன் 1 விக்கெட்டும் கைப்பற்றினர். ரொமாரியோ ஷெப்பர்ட் மற்றும் ஷமர் ஜோசப் தலா 1 விக்கெட் கைப்பற்றினர். இங்கிலாந்து வீரர்கள் ஆர்ச்சர் மற்றும் டாசன் ரன் அவுட்டாகி இருந்தனர்.
இந்த தொடரில் இரண்டு ஆட்டங்களில் விளையாடி இரண்டிலும் வெற்றி பெற்ற மேற்கு இந்தியத் தீவுகள் அணி 4 புள்ளிகளுடன் குரூப்-சி பிரிவில் முதல் இடத்தில் உள்ளது.