பிறந்தநாள் கேக் சாப்பிட்ட சிறுமி உயிரிழப்பு..!

பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த சிறுமி தனது பிறந்தநாளை குடும்பத்தினருடன் கேக் வெட்டி கொண்டாடியிருக்கிறார். இந்த பிறந்தநாள் விழா, இவர்களின் வீட்டிலேயே குடும்பத்தினர் சூழ எளிமையாக நடந்துள்ளது.

இந்த பிறந்தநாள் கேக்கை, சிறுமியின் குடும்பத்தார், பட்டியாலாவில் ஒரு பேக்கரியில் இருந்து ஆன்லைனில் ஆர்டர் மூலமாக வரவழைத்துள்ளனர். இந்த கேக், மாலை 6 மணி அளவில் டெலிவரி செய்யப்பட்டதை அடுத்து, குடும்பத்தினர் சுமார் 7 மணிக்கு கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடப்பட்டுள்ளது. இந்த கேக்கை, பிறந்தநாள் கொண்டாடிய சிறுமி உள்பட அவரது குடும்பத்தார் அனைவருமே சாப்பிட்டுள்ளனர்.

இதையடுத்து, மறுநாள் காலையில் குடும்பத்தினர் அனைவருமே உடல் உபாதையால் பாதிக்கப்பட்டுள்ளனர். சிறுமி மயக்க நிலைக்கு சென்றதை அடுத்து மருத்துவ மனைக்கு அழைத்து செல்லப்பட்டிருக்கிறார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து விட்டார்.

சிறுமியின் உயிரிழப்பிற்கு, அவர் சாப்பிட்ட கேக்தான் காரணம் என அவரது குடும்பத்தினர் குற்றம் சாட்டியிருந்தனர். அந்த கேக்கில் கலந்திருந்த விஷப் பொருள்தான் சிறுமியின் உயிரை பறித்திருப்பதாக கூறி, போலீஸாரிடம் புகார் தெரிவித்திருந்தனர். இதன் அடிப்படையில், பேக்கரி உரிமையாளர் மீது பாேலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்காெண்டு வந்தனர். இதற்கிடையில் சிறுமியின் உடல் பிரேத பரிசோதனைக்கு ஆளாக்கப்பட்டது.

சிறுமி சாப்பிட்டது, சாக்லேட் கேக் ஆகும். இந்த கேக்கில், Artificial Sweeteners எனப்படும் செயற்கை இனிப்பு பொருள் ஒன்று கலக்கப்பட்டுள்ளது. இதன் பெயர் saccharine. இதை, இனிப்பு சுவைக்காக பலர் தங்களது உணவு பொருட்களை தயாரிக்கும் போது பயன்படுத்துவர். இந்த பொருள், சிறுமி சாப்பிட்ட கேக்கில் அதிகளவு கலக்கப்பட்டதுதான் காரணம் என தற்போது கண்டறியப்பட்டிருக்கிறது.

இதை குறிப்பிட்ட அளவு சில செயற்கை பானங்களிலும் இனிப்பு பொருட்களிலும் பயன்படுத்துவதால் எந்த பிரச்சனையும் இல்லை என்றும், ஆனால் அளவுக்கு மீறி இதனை உபயோகித்தால் உடலில் உள்ள க்ளூகோஸ் அளவு அதிகரித்து உயிரையே மாய்க்க கூடும் என்று பரிசோதித்த மருத்துவர்கள் தெரிவித்திருக்கின்றனர்.

இது போன்ற கேக்கை தயாரித்த கடையை, Zomato நிறுவனம் தங்களின் உணவு டீலர்களின் பட்டியலில் இருந்து நீக்கியிருக்கிறது. ஏற்கனவே அந்த கடையின் உரிமையாளரின் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்த நிலையில் அந்த கடைக்கும் சீல் வைக்கப்பட்டுள்ளது.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *