மண்ணச்சநல்லூர்:
சக்தி தலங்களில் முதன்மையான சமயபுரம் மாரியம்மன் கோவிலில் சித்திரை பெருந்திருவிழா கடந்த 6-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அன்று முதல் ஒவ்வொரு நாளும் காலையில் அம்மன் பல்லக்கிலும், இரவு 8 மணி அளவில் பல்வேறு வாகனங்களிலும் எழுந்தருளினார்.
நேற்று இரவு சமயபுரம் தெப்பக்குளம் அருகே உள்ள சூரப்பநாயக்கர் மண்டபத்தில் அம்மன் எழுந்தருளினார். தொடர்ந்து வெள்ளி குதிரை வாகனத்தில் அம்மன் எழுந்தருளி மண்டகப்படி உபயம் கண்டருளினார். பின்னர் வையாளி கண்டருளும் நிகழ்ச்சி நடைபெற்றது.

விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை நடைபெற்றது. இதையொட்டி காலை 10.31 மணிக்கு மேல் 11.20 மணிக்குள் மிதுன லக்னத்தில் அம்மன் தேரில் எழுந்தருளினார்.
அதைத்தொடர்ந்து திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு ஓம் சக்தி பராசக்தி கோஷம் விண்ணதிர தேரை வடம் பிடித்து இழுத்தனர். தேர் ஓடும் ரத வீதிகள் முழுவதும் பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.
எங்கு பார்த்தாலும் மஞ்சள் ஆடை அணிந்த பெண் பக்தர்கள் திரண்டிருந்தனர். தேருக்கு முன்பாக ஏராளமான பக்தர்கள் பால் குடம், தீச்சட்டி, பறவைக் காவடி ஆகியவற்றை எடுத்து வந்து, தங்களது நேர்த்திக்கடனைச் செலுத்தினர்.
தேரோட்ட விழாவை காண நேற்று காலை முதலே தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பாத யாத்திரையாகவும், வாகனங்களிலும் பக்தர்கள் வந்து குவிந்தனர்.
பாதயாத்திரையாக வந்த பக்தர்களூக்கு திருவானைக்காவல், கொள்ளிடம் டோல்கேட், பளூர், சமயபுரம் உள்ளிட்ட இடங்களில், பல்வேறு அமைப்புகள், பொதுமக்கள் சார்பில் நீர்மோர், குளிர்பானங்கள், குடிநீர், அன்ன தானம் உள்ளிட்டவை வழங்கப்பட்டன.
கோவில் ராஜகோபுரம், மேற்கு, தெற்கு, வடக்கு கோபுரங்கள் மற்றும் கோவில் வளாகம் முழுவதும் வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது.
திருச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வ நாகரத்தினம் தலைமையில் 4 கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள், 16 துணை போலீஸ் சூப்பிரண்டுகள், 31 போலீஸ் இன்ஸ்பெ க்டர்கள், 1263 போலீசார், 275 ஊர்க்கால் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

பக்தர்கள் கூட்ட நெரிசலில் சிக்கி கொள்ளாமல் இருக்க ‘பாக்ஸ் டைப்’ அமைத்து பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. தீயணைப்பு வாகனங்கள் மற்றும் மீட்பு பணியாளர்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டிருந்தனர். 2 இடங்களில் தற்காலிக மருத்துவமனைகள் அமைக்கப்பட்டிருந்தது.
தேர் சுற்றி வரும்போது மின்வாரிய ஊழியர்களை ஆங்காங்கே நியமித்து மின்சாரத்தை உரிய நேரத்தில் தடை செய்தும், மின் கம்பங்களில் இருந்து செல்லும் மின் கம்பிகளை அகற்றியும் எவ்வித இடையூறும் இல்லாமல் தேர் செல்வதற்கு வழிவகை செய்யப்பட்டிருந்தது.
3 வெடிபொருள் சோதனை மற்றும் கண்காணிப்பு படைகள் கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
4 டிரோன் கேமராக்கள் மூலம் சமயபுரம் மாரியம்மன் கோவிலை சுற்றி வெவ்வேறு பகுதிகளில் இருந்து கழுகு பார்வையின் மூலம் கண்காணிக்கப்பட்டது. 50 இடங்களில் கண்காணிப்பு கேமராக்களும் அமைத்து கண்காணிக்கப்பட்டது.
மேலும் கண்காணிப்பு கோபுரம் அமைக்கப்பட்டு, போலீசார் பைனாகுலர் மூலம் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
பக்தர்களின் வசதிக்காக பல்வேறு பகுதிகளில் இருந்தும் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. மண்ணச்சநல்லூர் செல்லும் சாலையில் சக்திநகர், கரியமாணிக்கம் பிரிவு ரோடு உள்ளிட்ட இடங்களில் தற்காலிக பஸ் நிலையம் அமைக்கப்பட்டது.
விழாவை முன்னிட்டு நாளை (புதன்கிழமை) அம்மன் வெள்ளிகாமதேனு வாகனத்திலும், நாளை மறுநாள் (வியாழக்கிழமை) அம்மன் முத்துப்பல்லக்கிலும் புறப்பாடாகிறார்.
18-ந்தேதி மாலை அம்மனுக்கு அபிஷேகமும், இரவு 7 மணிக்கு வசந்த மண்டபத்தில் தெப்ப உற்சவ தீபாராதனை நடைபெறுகிறது. தேர் முடிந்து எட்டாம் நாளான 22-ந்தேதி இரவு அம்மன் தங்க கமல வாகனத்தில் புறப்பாடாகிறார்.