சென்னை:
டெல்லியில் நீட் தேர்வு முறைகேட்டுக்கு எதிராக நடைபெறும் போராட்டத்தில், சமூக விரோதிகளுடன் கைகோத்து தேசத்தின் பொது அமைதிக்கு பங்கம் விளைவிப்பதாக நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தியை கண்டித்து தமிழக பாஜக சார்பில் சத்தியமூர்த்தி பவனை முற்றுகையிடும் போராட்டம் நேற்று நடைபெற்றது.
சென்னை அண்ணாசாலையில் நடைபெற்ற இந்த போராட்டத்துக்கு பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தலைமை தாங்கினார். மாநில துணைத் தலைவர் வி.பி.துரைசாமி, மாநில செயலாளர்கள் கராத்தே தியாகராஜன், வினோஜ் பி.செல்வம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
பின்னர், தி.நகரில் உள்ள கமலாலயத்தில் செய்தியாளர்களிடம் நயினார் நாகேந்திரன் கூறியதாவது:
நீட் தேர்வு 2012-ம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சியில் இருந்த போது கொண்டுவரப்பட்டது. இதை எதிர்த்து பல மாநிலங்கள் உச்ச நீதிமன்றத்துக்கு சென்றன.
அப்போது, காங்கிரஸ் அரசின் சார்பாக நீதிமன்றத்தில் வாதாடியது, முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரத்தின் மனைவி நளினி சிதம்பரம்.
தீர்ப்பு வந்த பிறகு இனிமேல் யாராலும் நீட் தேர்வை ரத்து செய்ய முடியாது என காங்கிரஸ் கட்சி சொன்னது.
ஆனால், இன்று பாஜகதான் மாணவர்களுக்கு எதிராக நீட் தேர்வு கொண்டு வந்ததாக ஒரு மாயப் பிம்பத்தை உருவாக்கி கொண்டிரு க்கிறார்கள். தற்போது, சிஜேபி பின்னால் நின்று ராகுல்காந்தி போராட்டத்தை நடத்தி கொண்டிருக்கிறார்.
நாடாளுமன்றத்தில் எப்போ தெல்லாம் முக்கியமான மசோதாக்கள் கொண்டு வரப்படுகிறதோ அப்போதெல்லாம், காங்கிரஸ் இதுபோன்ற போராட்டங்களை முன்னெடுக்கிறது.
ஜனநாயகமே இல்லாமல், அனைத்து அமைச்சர்களும் ஜனநாயகன் படத்தை பார்க்க தியேட்டரில் போய் அமர்ந்திருக்கிறார்கள். 5-ம் தேதி தமிழக பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. மேட்டூர் அணையில் இன்னும் தண்ணீர் திறக்கவில்லை.
தமிழக அரசு, கர்நாடகா முதல்வரிடம் இதுகுறித்து பேசி நடவடிக்கை எடுக்காமல், தியேட்டரில் அனைத்து அமைச்சர்களும் படம் பார்த்து கொண்டிருக்கிறார்கள் என்றால், அவர்களுக்கு ஓட்டு போட்டவர் களிடம்தான் நாம் கேள்வி கேட்க வேண்டும்.
டெல்டா பகுதிகள் வறண்டு போய் கிடக்கிறது. ஆக.1-ம் தேதி பாஜக சார்பில் தஞ்சாவூரில் மிகப்பெரிய அளவில் ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.