விடிய விடிய காத்திருந்து 10 அவதாரங் களில் தோன்றிய பெருமாளை ஏராளமான பக்தர்கள் தரிசனம் !!

திண்டுக்கல்:

திண்டுக்கல் அருகே உள்ள தாடிக்கொம்பு சவுந்தரராஜ பெருமாள் கோவிலில் சித்ரா பவுர்ணமி திருவிழா கடந்த 22-ந் தேதி தொடங்கியது. இதனை முன்னிட்டு சவுந்தரராஜ பெருமாள் கள்ளழகர் திருக்கோலத்தில் திண்டுக்கல் நோக்கி புறப்பட்டார்.

குடகனாற்றில் இறங்கி பக்தர்களுக்கு அருள்பாலித்த பெருமாள் அதனைத் தொடர்ந்து மண்டூக முனிவருக்கு சாப விமோஷனம் அளித்தார். எதிர்சேவையில் தாடிக்கொம்பு ரோடு கருப்பணசாமி கோவிலில் தங்கிய பெருமாளை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

அதனைத் தொடர்ந்து பல்வேறு மண்டகப்படிகளில் எழுந்தருளி திண்டுக்கல் அபிராமி அம்மன் கோவிலில் தங்கினார். அங்கிருந்து நேற்று காலை 10 மணிக்கு குதிரை வாகனத்தில் புறப்பாடான பெருமாள் கிழக்கு ரத வீதி, தெற்குத் தெரு, மேட்டுப்பட்டி, பெரியகடை வீதி, மேற்கு ரத வீதி, மதுரை ரோடு, மெயின் ரோடு வழியாக வெள்ளை விநாயகர் கோவில் அருகே உள்ள தனியார் மஹாலுக்கு வந்தடைந்தார்.

அங்கு சவுராஷ்டிர மகாஜன சபையினரின் மண்டகப்படி நடைபெற்றது. இதில் பெருமாள் மச்ச அவதாரம், கூர்மம், வராக, நரசிம்ம, வாமண, ராமர், பலராமர், பரசுராமர், கிருஷ்ணர் மற்றும் மோகினி என 10 அவதாரங்களில் எழுந்தருளி அருள்பாலித்தார்.

ஒவ்வொரு அலங்காரத்திலும் பெருமாளுக்கு சிறப்பு பூஜைகள் மற்றும் தீபாராதனை நடத்தப்பட்டது. விடிய விடிய காத்திருந்து 10 அவதாரங்களில் தோன்றிய பெருமாளை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

இதனைத் தொடர்ந்து இன்று கருட வாகனத்தில் எழுந்தருளும் பெருமாளின் திரு அவதார நிகழ்ச்சி நடைபெறுகிறது. அதன் பின் பெருமாள் தாடிக்கொம்பு சென்றடைகிறார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *