வீண் பழி விலகச்செய்யும் `சியாமந்தக மணி கதை

சத்தியவதன் என்ற அரசனின் வழியில் வந்தவன், சத்ரஜித். இவன் சூரிய பகவான் மீது மிகுந்த பக்தி கொண்டிருந்தான். சூரிய பகவானை தினமும் வழிபாடு செய்வதை வழக்கமாகக் கொண்டிருந்தான். அவனுக்கு சூரிய பகவானும் அருள்புரிந்து வந்தார்.

ஒரு சமயம் சத்ரஜித்துக்கு, சூரிய பகவான் காட்சி கொடுத்தார். மிகுந்த ஒளியுடன் காணப்பட்டதால் சூரிய பகவானின் முழு உருவத்தையும் சத்ரஜித்தால் பார்க்க முடியவில்லை.

அவன் சூரிய பகவானைப் பார்த்து, “இறைவா.. நீங்கள் மிகுந்த ஒளியுடன் இருக்கிறீர்கள். ஆகாயத்தில் பார்க்கும் பொழுது, உங்களின் முழு உருவத்தையும் என்னால் பார்க்க முடியவில்லை. அதனால் உங்களை தரிசனம் செய்ய முடியாத வருத்தம் எனக்கு ஏற்படுகிறது. உங்களின் திருவடி முதல் சிரசு வரை நான் தரிசிக்க வேண்டும். அதற்கு அருள்புரிய வேண்டும்” என்று வேண்டினான்.

அதற்கு சூரிய பகவான், “என் கழுத்தில் உள்ள சியாமந்தக மணி அதிக ஒளியை வெளிப்படுத்துவதால்தான், உன்னால் என்னை பார்க்க முடியவில்லை” என்று கூறி, தன் கழுத்தில் இருந்த சியாமந்தக மணியை கழற்றி வைத்தார்.

அதன்பிறகு சூரிய பகவானை முழுமையாக தரிசனம் செய்யும் பாக்கியம், சத்ரஜித்துக்கு கிடைத்தது. சூரியனின் கழுத்தில் கிடந்த சியாமந்தக மணி தனக்கு கிடைக்க வேண்டும் என்று சத்ரஜித் விரும்பினான். அவனது விருப்பத்தை அறிந்து கொண்ட சூரிய பகவானும், சியாமந்தக மணியை அவனுக்கு பரிசாக அளித்து விட்டு மறைந்தார்.

இந்த சியாமந்தக மணி, ஒரு நாளைக்கு 8 பாரம் (ஒரு கழுதையால் சுமக்கக் கூடிய அளவு) பொன்னை அளிக்கக்கூடியது. இந்த மணியை தன் கழுத்தில் அணிந்து கொண்டு, சூரிய பகவானே நடந்து வருவது போல் துவாரகையை நோக்கி நடந்து சென்றான் சத்ரஜித். துவாரகை மக்கள் “சூரிய பகவானே வருகிறார்” என்பதாக பேசிக் கொண்டனர்.

இதை அறிந்த கிருஷ்ண பகவான், ‘இந்த ரத்தினம் நல்லவர்கள் கையில் இருக்க வேண்டியது, சத்ரஜித் கழுத்தில் இருப்பது தகாது. இது இருக்க வேண்டியது உக்கிரசேன அரசனின் அரண்மனை பொக்கிஷத்தில்தான்’ என்று எண்ணினார்.

இந்த எண்ணத்தை தெரிந்து கொண்ட சத்ரஜித், கிருஷ்ணரால் தனக்கு ஏதாவது துன்பம் வரலாம் என்று நினைத்து, சியாமந்தக மணியை தன்னுடைய தம்பி பிரசேனனிடம் கொடுத்து வைத்தான்.

சியாமந்தக மணிக்கு ஒரு குணம் உண்டு. தகுதி இல்லாதவர், சுத்தமற்றவர் கையில் அது சென்றால், அது அந்த நபருக்கு கெடு பலன்களையே ஏற்படுத்தும்.

பிரசேனன், சியாமந்தக மணியை தன் கழுத்தில் அணிந்து கொண்டு கம்பீரமாக காட்டில் வேட்டையாடச் சென்றான். ஒளி வீசும் அந்த மணியைக் கண்ட ஒரு சிங்கம், பிரசேனனையும், அவனது குதிரையையும் கொன்று விட்டு, சியாமந்தக மணியை ஏதோ ஒரு மாமிசம் என்று எண்ணிக் கொண்டு வாயில் கவ்விச் சென்றது.

அந்த நேரத்தில் கரடிகளின் தலைவனான ஜாம்பவான் அங்கு வந்தார். அவர் சிங்கத்தின் வாயில் இருந்த சியாமந்தக மணியை கண்டதும், சிங்கத்தைக் கொன்று விட்டு, அதை எடுத்துச் சென்று தன் மகன் சுகுமாரன் விளையாடுவதற்காக அவன் தூங்கும் தொட்டிலில் கட்டி வைத்தார்.

இதற்கு இடையில் காட்டிற்குச் சென்ற பிரசேனன், பல நாட்களாக திரும்பி வராததால், சியாமந்தக மணிக்காக கிருஷ்ணன்தான், பிரசேனனைக் கொன்று விட்டதாக அனைவரும் நினைத்தனர். இந்த வீண் பழி, கிருஷ்ணனின் காதிற்கும் சென்றது.

அவர் ‘இதை இப்படியே விடக்கூடாது. தன் மீது விழுந்த பழியை நீக்க வேண்டும்’ என்று நினைத்து, தன் யாதவ சேனைகளுடன் காட்டிற்குச் சென்று பிரசேனனை தேடினார். அப்பொழுது பிரசேனனின் குதிரையின் காலடி தடம் இருப்பதைக் கண்டார்.

அதை பின்பற்றிச் சென்றபோது, பிரசேனனும், அவன் குதிரையும் ஒரு இடத்தில் கொல்லப்பட்டதைக் கண்டனர். அதைத் தொடர்ந்து ஒரு சிங்கத்தின் காலடித் தடம் இருப்பதைப் பார்த்தனர்.

அந்த தடத்தை பின்பற்றி செல்கையில், ஓரிடத்தில் சிங்கம் இறந்து கிடந்தது. அதற்கு அருகில் கரடியின் காலடித் தடம் தென்பட்டது. அதை பின்பற்றிச் செல்கையில், அது ஒரு குகையின் வாசலில் போய் முடிந்தது.

குகைக்குள் சென்று பார்க்க அனைவரும் தயங்கினர். உடனே கிருஷ்ண பகவான் தனியாக அந்த குகைக்குள் சென்றார். அப்பொழுது ஒரு பெண், ஜாம்பவானின் மகனை கையில் வைத்துக்கொண்டு, சியாமந்தக மணியைப் பற்றி சொல்லிக் கொண்டிருந்தாள். கிருஷ்ணனை பார்த்தவுடன் பயந்து அலற, அந்த சப்தம் கேட்டு ஜாம்பவான் அங்கு ஓடி வந்தார்.

கிருஷ்ண பகவானுக்கும், ஜாம்பவானுக்கும் யுத்தம் ஆரம்பமாயிற்று. அவர்கள் இருவரும் 21 நாட்கள் தொடர்ந்து யுத்தம் செய்தனர். ஒருவருக்கொருவர் கைகளால் அடித்துக் கொண்டு மல்யுத்தம் புரிந்தனர். இறுதியில் ஜாம்பவான் தன் மேல் விழும் அடி அத்தனையும் ராமபிரானின் அரவணைப்பு போல் தோன்றுவதை உணர்ந்தார்.

வந்துள்ளது நாராயணனின் அவதாரம் என்பதை அறிந்து கொண்ட அவர், கிருஷ்ண பகவானிடம் சரணடைந்தார். கிருஷ்ணனும் ஜாம்பவானிடம் மகிழ்ச்சியாக பேசினார். ஜாம்பவான், சியாமந்தக மணியை கிருஷ்ண பகவானிடம் கொடுத்துவிட்டு, தன் வளர்ப்பு மகள் ஜாம்பவதியையும் கிருஷ்ணருக்கு திருமணம் செய்து கொடுத்தார்.

இந்த கதையை படிப்பவர்களுக்கு, வீண் பழியால் வரும் துன்பங்கள் அனைத்தும் நீங்கும். பெண்களுக்கு திருமணத் தடை விலகி, விரைவில் திருமணம் நடந்தேறும் என்பது ஐதீகம்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *