டி20 உலகக்கோப்பை தொடரில் உலகின் நம்பர் ஒன் பேட்டரான சூர்யகுமார் யாதவ் நிச்சயம் இருப்பார் – யுவராஜ் சிங்!!

ஐசிசி டி20 உலகக்கோப்பை தொடர் வரும் ஜூன் மாதம் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெறவுள்ளது. இத்தொடரில் மொத்தம் 20 அணிகள் பங்கேற்கவுள்ள நிலையில், அனைத்து அணிகளும் இன்னும் சில தினங்களில் தங்கள் அணி வீரர்களை அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் நடப்பு டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் தூதுவராக இந்திய அணியின் முன்னாள் வீரர் யுவராஜ் சிங் நியமிக்கப்பட்டுள்ளார். இந்திய அணி கடந்த 2007-ம் ஆண்டு நடைபெற்ற டி20 உலகக்கோப்பை தொடரில் கோப்பையை வெல்வதற்கு முக்கிய காரணமாக யுவராஜ் சிங் இருந்தார்.

இந்நிலையில் ரோகித் சர்மா, விராட் கோலி ஆகியோரது கிரிக்கெட் எதிர்காலங்கள் குறித்து யுவராஜ் சிங் தனது கருத்தை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது:-

நடப்பு டி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணியின் மிக முக்கிய வீரர்களில் ஒருவராக உலகின் நம்பர் ஒன் டி20 பேட்டரான சூர்யகுமார் யாதவ் நிச்சயம் இருப்பார். ஏனெனில் அவரால் எப்போது வேண்டுமானாலும் ஆட்டத்தின் போக்கை மாற்ற முடியும்.

அணியின் பந்துவீச்சைப் பொறுத்தவரையில் ஜஸ்ப்ரித் பும்ரா மற்றும் யுஸ்வேந்திர சஹால் ஆகியோர் சிறப்பாக செயல்படுவார்கள் என எதிர்ப்பார்க்கிறேன். அதேபோல அனுபவ வீரர் தினேஷ் கார்த்திக்குக்கு இந்த உலகக்கோப்பை தொடரில் வாய்ப்பு வழங்கப்படும் என்றால், அவரை தாராளமாக பிளேயிங் லெவனில் எடுக்கலாம்.

ஒருவேளை அவர் அணியில் இல்லாத பட்சத்தில் இளம் வீரர்களுக்கு அந்த வாய்ப்பினை வழங்க வேண்டும். என்னைப் பொறுத்தவரையில் ரிஷப் பந்த் மற்றும் சஞ்சு சாம்சன் ஆகியோர் தற்சமயம் சிறப்பான ஃபார்மில் உள்ளதாக நினைக்கிறேன்.

இந்த உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியில் ஷிவம் துபேவை நான் பார்க்க விரும்புகிறேன். இந்த சீசனில் நிறைய இளம் வீரர்கள் அதிரடியாக விளையாடினாலும், உலகக்கோப்பை அணியில் நான் ஷிவம் தூபேவை பார்க்க விரும்புகிறேன்.

மேலும் அணியின் மூத்த வீரர்கள் என்னதான் தரமான ஃபார்மில் இருந்தாலும் அதை மறந்து, வயதின் அடிப்படையில் மூத்த வீரர்கள் மீது விமர்சனங்கள் எழும். விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா ஆகியோர் இந்திய அணியின் சிறந்த வீரர்கள். அவர்கள் தங்கள் விருப்பத்துக்கு ஏற்ப சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு குறித்த முடிவை அறிவிக்க வாய்ப்பு கொடுக்க வேண்டும்.

மேலும் மூத்த வீரர்கள் தொடர்ச்சியாக 50 ஓவர் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவதால், டி20 கிரிக்கெட்டில் அதிக இளம் வீரர்களை பார்க்க விரும்புகிறேன். அது அடுத்த டி20 உலகக் கோப்பை தொடருக்கான அணியை கட்டமைக்க உதவும். இந்த உலகக் கோப்பைக்குப் பிறகு, நிறைய இளைஞர்கள் அணிக்குள் வருவதையும், அடுத்த உலகக் கோப்பைக்கான அணியில் இடம் பெறுவதையும் பார்க்க விரும்புகிறேன்.

என்று யுவராஜ் தெரிவித்துள்ளார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *