சென்னை:
தவெக எம்எல்ஏ-விடம் குதிரை பேரம் நடத்தியதாகத் தொடரப்பட்ட வழக்கில் திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி சென்னை முதன்மை அமர்வு நீதி மன்றத்தில் நேற்று சரண் அடைந்து, முன்ஜாமீன் பெற்றார்.
தவெக ஆட்சியை கவிழ்க்கும் நோக்கில் ஊத்தங்கரை தவெக எம்எல்ஏ இளையராஜாவிடம் குதிரை பேரத்தில் ஈடுபட்டதாக திருநாவுக்கரசு, கார்த்திக், ரமேஷ், தியாகராஜன், நரேஷ் உள்ளிட்ட 14 பேரை திருவல்லிக்கேணி போலீஸார் கைது செய்துள்ளனர்.
இந்த வழக்கில் திமுக முன்னாள் அமைச்சரான செந்தில் பாலாஜி, அவரது சகோதரர் அசோக்குமார் மீதும் குற்றம்சாட்டப்பட்ட நிலையில், அவர்களுக்கு சென்னை உயர் நீதிமன்றம், ஜூலை 8 அன்று நிபந்தனை முன்ஜாமீன் வழங்கியது.
மேலும், இந்த உத்தரவு நகல் கிடைக்கப்பெற்ற நாளி்ல் இருந்து 15 நாட்களுக்குள் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இருவரும் சரண் அடைந்து ரூ.25 ஆயிரத்துக்கான சொந்த ஜாமீன் மற்றும் அதே தொகைக்கான இருநபர் ஜாமீன் உத்தரவாதம் அளித்து முன்ஜாமீன் பெறலாம் எனவும் அறிவுறுத்தியிருந்தது.
இந்நிலையில் குதிரை பேர வழக்கில் உயர் நீதிமன்றம் விதித்த நிபந்தனைகளின்படி முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தனது வழக்கறிஞர் பரணிக்குமாருடன் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நீதிபதி எஸ்.கார்த்திகேயன் முன்பாக நேற்று காலை 10.30 மணிக்கு சரண் அடைந்து ஜாமீன் உத்தரவாதத்தை தாக்கல் செய்தார்.
மாலை 3 மணிக்கு இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, உத்தரவாதத்தை ஏற்று முன்ஜாமீன் வழங்கினார்.
மேலும், இன்று (ஜூலை 25) முதல் திருவல்லிக்கேணி காவல் நிலைய விசாரணை அதிகாரி முன்பாக ஆஜராக வேண்டுமென செந்தில் பாலாஜிக்கு நீதிபதி உத்தரவிட்டார். அதையடுத்து அவர் நீதிமன்றத்தில் இருந்து புறப்பட்டுச் சென்றார்.
செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமார், வேறு ஒரு வழக்குக்காக கரூர் சென்றுள்ளதால் ஜூலை 27-ம் தேதி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் சரணடைவார் என தெரிவிக்கப்பட்டது.
8 பேர் ஜாமீன் மனு தள்ளுபடி இதற்கிடையே இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள 14 பேரில் திருநாவுக்கரசு, தியாகராஜன், ராஜேஷ், சீனிவாசன், செல்வன், ராஜசேகர், சேதுராஜ் மற்றும் கணேசன் ஆகிய 8 பேருக்கு ஜாமீன் கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டு இருந்தது.
இவர்களுக்கு ஜாமீன் வழங்க அரசு தரப்பில் ஆட்சேபம் தெரிவிக்கப் பட்டது. அதையடு்த்து இந்த ஜாமீன் மனுக்களை தள்ளுபடி செய்து சென்னை முதன்மை அமர்வு நீதிபதி எஸ்.கார்த்திகேயன் உத்தரவிட்டுள்ளார்.