திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் கடந்த சில மாதங்களாகவே வறண்ட சூழல் நிலவி வருகிறது. இதன் காரணமாக அங்குள்ள வனப்பகுதிகளில் அவ்வப்போது காட்டுத்தீ ஏற்பட்டு கட்டுப்படுத்தப்பட்டு வருகிறது.
கடந்த 3 நாட்களுக்கு முன்பு மேல்மலை பகுதியில் பூம்பாறையை அடுத்த கூக்கால் வனப்பகுதியில் காட்டுத்தீ ஏற்பட்டது.
தொடர்ந்து பூம்பாறை, மன்னவனூர் உள்ளிட்ட பகுதிகளிலும் காட்டுத்தீ பரவி பற்றி எரிந்து வருகிறது.
இதனை கட்டுப்படுத்த வனத்துறையினரும், தீயணைப்புத் துறையினரும் போராடி வருகின்றனர். ஆனாலும் தீ கட்டுக்குள் வராமல் மேலும் மேலும் பல்வேறு பகுதிகளுக்கு பரவி வருகிறது.
இன்று 4வது நாளாக பூம்பாறை, கூக்கால், பாரி கோம்பை உள்ளிட்ட வனப்பகுதிகளில் காட்டு தீ தொடர்ந்து எரிந்து வருகிறது. இதில், சுமார் 500 ஏக்கரில் இருந்த மரங்கள் எரிந்து நாசமாகின.
காட்டுதீயால் சுற்றுலா தலங்களான கூக்கால் ஏரி, மன்னவனூர் சூழல் பூங்கா ஆகிய பகுதிகளுக்கு சுற்றுலா பயணிகள் செல்ல முடியவில்லை.
மேலும், இந்த பகுதியில் மலை கிராமங்களில் வசிக்கும் மக்கள் காட்டுத் தீயால் ஏற்பட்ட புகை காரணமாக மிகவும் அவதிப்படுகின்றனர்.