மதுரை:
பழநி கோயிலுக்குச் சொந்தமான ரூ.100 கோடி நில மோசடி வழக்கை சிபிஐ விசாரணை கோரி திமுக, அதிமுக மற்றும் அறக்கட்டளை நிர்வாகி தாக்கல் செய்த மனுக்களை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
பழநி முருகன் கோயிலுக்குச் சொந்தமான ரூ.100 கோடி மதிப்புள்ள நிலம் தனிநபர்கள் பெயருக்கு மோசடியாக பத்திரப்பதிவு செய்யப்பட்டது தொடர் பாக சார் பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் உள்பட பலர் மீது சிபிசிஐடி போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றக்கோரி பழநி அதிமுக முன்னாள் எம்எல்ஏ வேணுகோபால், தண்டாயுதபாணி சுவாமிகள் மடத்தின் அறங்காவலர் அன்னபூரணி சிவக்குமார், திமுகவைச் சேர்ந்த பழநிநகராட்சித் தலைவர் உமா மகேஸ்வரி ஆகியோர் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனுத்தாக்கல் செய்தனர்.
மனுக்களை நீதிபதிகள் சி.வி.கார்த்திகேயன், ஆர்.சக்திவேல் அமர்வு விசாரித்தது. மனுதாரர்கள் தரப்பில், நிலத்தின் மதிப்பு ரூ.2 கோடி என குறைத்து காட்டப்பட்டுள்ளது.
கோயில் நிலம் பதிவு தொடர்பாக தனி நீதிபதி ஏப்.10-ல் உத்தரவிட்டுள்ளார். அந்த உத்தரவை எதிர்த்து கோயில் நிர்வாகம் சார்பில் ஜூலை 3 வரை மேல்முறையீடு செய்யவில்லை.
பத்திரப்பதிவில் தவறு நடந்துள்ளதாக ஊடகங்களில் அமைச்சர் கருத்து தெரிவித்துள்ளார். நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்ட பிறகே கைது நடவடிக்கைகள் தொடங்கப்பட்டன.
இந்த மோசடியின்பின்னால் பலர் உள்ளனர். எனவே விசாரணையை சிபிஐக்கு மாற்ற வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.
கோயில் நிர்வாகம் தரப்பில், சிபிசிஐடி விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்கப்படுகிறது.
அந்த நிலத்தை பத்திரப்பதிவு செய்ய வேண்டாம் என பதிவுத் துறைக்கு கோயில் நிர்வாகம் தரப்பில் கடிதம் அளிக்கப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டது.
அரசுத் தரப்பில், பத்திரப்பதிவு மோசடி தொடர்பாக ஜூலை 13-ல் பழநி அடிவாரம் போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். பின்னர் விசாரணை சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது.
இந்த மனுக்கள் அரசியல் நோக்கத்துக்காக தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இவற்றை பொது நல மனுக்கள் என்ற அடிப்படையில் விசாரிக்க முடியாது. மனுக்களை தள்ளுபடி செய்ய வேண்டும் எனக் கோரப்பட்டது.
பின்னர் நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: பழநி கோயில் நில மோசடி வழக்கை சிபிசிஐடி விசாரித்து வருகிறது.
6 மாவட்டங்களில் சிறப்பு குழுக்கள் மூலம் 16 இடங்களில் சோதனை நடத்தி 207 ஆவணங்கள், 12 செல்போன்கள், 3 மடிக்கணினிகள், 8 பிற மின்னணு சாதனங்களை பறிமுதல் செய்துள்ளனர். தற்போது வரை 115 சாட்சிகளிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.
பதிவுத் துறை, வருவாய்த்துறை, வங்கி தொடர்பான பதிவுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அவற்றை விரிவாக ஆய்வு செய்ய வேண்டியுள்ளது. சிசிடிவி காட்சிகளும் சேகரிக்கப்பட்டுள்ளன.
வழக்கு விசாரணையை ஒரு அமைப்பில் இருந்து மற்றொரு அமைப்புக்கு மாற்றும்போது குற்றம் சாட்டப்பட்ட நபர்களுக்கு எதிராக முகாந்திரம் இருப்பதை பதிவு செய்ய வேண்டும் என உச்ச நீதிமன்றம் ஏற்கெனவே தெரிவித்துள்ளது.
மேலும், குற்றம்சாட்டப்பட்டவர்கள் உண்மையில் குற்றம் செய்தாரா, இல்லையா என்பதைக் கண்டறிய சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என நீதிமன்றம் நேரடியாக உத்தரவிட முடியாது என்றும் உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.
வெறும் சந்தேகம் அல்லது யூகத்தின் அடிப்படையில் விசாரணையை வேறு அமைப்புக்கு மாற்ற முடியாது. மனுக்கள் தள்ளுபடி செய்யப்படுகின்றன.
சிபிசிஐடி தொடர்ந்து விசாரணை நடத்த வேண்டும். இவ்வாறு நீதிபதிகள் உத்தரவில் கூறியுள்ளனர்.