சென்னை:
முதல்வரின் ரூ.25 லட்சம் காப்பீட்டு திட்டம் விரைவில் அமல்படுத்தப்படும். புதிய அட்டை தேவையில்லை. பழைய அட்டை வைத்து பயன்படுத்தி கொள்ளலாம் என்று சுகாதாரத்துறை அமைச்சர் அருண்ராஜ் தெரிவித்தார்.
சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையின் 2, 3-ம் தளங்களில் ரூ.1.50 கோடியில் நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் புதுப்பிக்கப்பட்ட இரண்டு விரிவுரை அரங்குகளை சுகாதாரத்துறை அமைச்சர் அருண்ராஜ் திறந்து வைத்தார்.
மருத்துவ கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குநர் (பொ) வா.லோகநாயகி, ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை டீன் சாந்தாராமன், ஆர்எம்ஓக்கள் உமாபதி, அறவாழி உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
அப்போது, அமைச்சர் அருண்ராஜ் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் புதிதாக அறிவிக்கப்பட்டுள்ள காப்பீட்டுத் தொகை ரூ. 25 லட்சமாக உயர்த்தும் திட்டம் விரைவில் அமல்படுத்தப்படும். இதற்காக புதிய காப்பீட்டு அட்டை எதுவும் தேவையில்ல.
பழைய அட்டையையே பயன்படுத்தி கொள்ளலாம். காப்பீட்டு தொகை ரூ.5 லட்சத்திலிருந்து ரூ.25 லட்சமாக உயர்த்தப்படுவதால், காப்பீட்டு கட்டணம் 5 மடங்கு அதிகரிக்கும் என்று அர்த்தமில்லை.
உயர் சிகிச்சை மற்றும் காப்பீடு கோரும் குடும்பங்களின் எண்ணிக்கை குறைவாகவே இருக்கும். இதற்கு தேவையான நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.
ஏஎச்1என்1 மற்றும் டெங்கு பாதிப்புகள் குறித்து பொதுமக்கள் தேவையற்ற அச்சம் கொள்ள தேவையில்லை. முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
காய்ச்சல் பரிசோதனைகள் அதிகளவில் நடத்தப்படுவதாலேயே பாதிப்பு எண்ணிக்கை அதிகமாக தெரிகிறது.
அரசு மருத்துவமனைகளில் அனைத்துவிதமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
மழைக்காலம் என்பதால், வீட்டை சுற்றி நல்ல தண்ணீர் தேங்காமல் பார்த்து கொள்ள வேண்டும். பகலில் கடிக்கும் ஏடிஸ் கொசுக்களால் டெங்கு பரவுகிறது.
அதனால், முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும். பள்ளி மாணவர்களுக்கான காய்ச்சல் முகாம்கள் நடத்தப்படும்.
காய்ச்சலுடன் தலைவலி, வாந்தி, உடல் வலி அதிகம் இருந்தால் உடனடியாக அருகில் உள்ள அரசு மருத்துவமனை அல்லது ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு சென்று மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும்.
செயற்கை கருத்தரிப்பு மையங்கள் மேலும் பல மாவட்ட அரசு மருத்துவமனைகளுக்கு விரிவாக்கம் செய்யப்படும். புற்றுநோய் சிகிச்சைக்கான கீமோதெரபி மருந்துகளின் தட்டுப்பாடு தொடர்பாக ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.