சென்னை:
டாக்டர் அகர்வால்ஸ் கண் மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள உலகின் முதல் விழிப்படல நுண் துளை சீரமைப்பு மையத்தை முதல்வர் விஜய் திறந்து வைத்து பார்வையிட்டார்.
சென்னை ஆழ்வார்பேட்டை டிடிகே சாலையில் உள்ள டாக்டர் அகர்வால்ஸ் கண் மருத்துவமனையில் உலகின் முதலாவது ‘பின்ஹோல் பியூபிலோபிளாஸ்டி – பிபிபி’ (விழிப்படல நுண் துளை சீரமைப்பு) சிகிச்சைக்கான பிரத்யேக மையம் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த மையத்தை முதல்வர் விஜய் திறந்து வைத்தார். இந்த சிகிச்சை செய்து கொண்டவர்களிடம் பார்வைத் திறன் குறித்து கேட்டறிந்தார்.
விழி வெண்படலத்தை (கார்னியா) மாற்றாமல், இந்த தொழில்நுட்பம் மூலம் எவ்வாறு சிகிச்சை அளிக்கலாம் என்பது குறித்து மருத்துவமனைகள் குழுமத்தின் தலைவர் அமர் அகர்வால், முதல்வருக்கு விளக்கினார்.
இந்த பிரத்யேக மையம் குறித்து மருத்துவர் அமர் அகர்வால் கூறியதாவது:
விழி வெண்படலத்தில் பாதிப்பு ஏற்படும்போது பார்வைத் திறன் பாதிக்கப்படும். இதற்கு விழிப்படல மாற்று சிகிச்சை மட்டுமே இதுவரை தீர்வாக உள்ளது.
அதற்கான அறுவை சிகிச்சையில் தொற்று அதிகரிக்கவும், உறுப்பு நிராகரிக்கப்படவும் வாய்ப்புகள் அதிகம்.
இதனால், உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கு பதிலாக, சேதமடைந்த விழிப்படலத்தின் முழு அடர்த்தியையும் சரிசெய்து விழியின் உட்புறத் திசுக்களை மீண்டும் சீராக்கும் சிகிச்சைகளை நாங்கள் மேற்கொள்கிறோம்.
அதன்படி, விழி வெண்படலத்தை சரிசெய்து ஒளிப் பிறழ்வு பாதிப்பை தடுக்கும் வகையில், ‘பின்ஹோல் பியூபிலோபி ளாஸ்டி’ என்ற சிகிச்சை முறையை அளிக்கிறோம்.
இதன்மூலம் கண் பாவை (பாப்பா) குறிப்பிட்ட அளவு சுருக்கப்படுகிறது. ஒரே நேரத்தில் செய்யப்படும் இந்த சிகிச்சையால் மீண்டும் பார்வைத் திறன் கிடைப்பது உறுதி செய்யப்படுகிறது.
தவிர, விழிப்படல மாற்று அறுவை சிகிச்சை தேவைப்படும் அனைவருக்கும் போதிய அளவு கொடையாளர்கள் கிடைப்பதில்லை. எனவே, பிபிபி சிகிச்சை அதற்கும் சரியான தீர்வாக அமைகிறது.
இந்த பிரத்யேக சிகிச்சை மையம் மூலம் ஏராளமான நோயாளிகளுக்கு மீண்டும் பார்வை கிடைப்பதை உறுதி செய்ய முடியும். இவ்வாறு அவர் கூறினார்.
விட்ரியோ – ரெட்டினல் சேவைகள் பிரிவு இயக்குநர் மனோஜ் கத்ரி, இயக்குநர் அதியா அகர்வால், மருத்துவ சேவைகளின் பிராந்திய தலைவர் சவுந்தரி உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.