முதல்வர் விஜய்யின் உரைக்கு பதில் அளிக்க சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் அனுமதி மறுத்ததால், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுகவினர் வெளிநடப்பு!!

சென்னை:
முதல்வர் விஜய்யின் உரைக்கு பதில் அளிக்க சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் அனுமதி மறுத்ததால், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுகவினர் வெளிநடப்பு செய்தனர்.

இன்று காலை சட்டப்பேரவை கூடியதும், அரசினர் சட்ட முன்வடிவுகள் அறிமுகம் செய்யப்பட்டன.

அமைச்சர்கள் செங்கோட்டையன், ஆனந்த் உள்ளிட்டோர் தங்கள் அமைச்சரவை சார்ந்த சட்ட முன்வடிவுகளை அறிமுகம் செய்தனர்.

2026-ம் ஆண்டு தமிழ்நாடு சம்பளங்கள் வழங்கல் திருத்த சட்டத் முன்வடிவு, 2026ம் ஆண்டு தமிழ்நாடு ஊராட்சிகள் இரண்டாம் திருத்தச் சட்ட முன்வடிவு உள்ளிட்டவை அறிமுகப் படுத்தப்பட்டு குரல் வாக்கெடுப்பின் மூலம் அவை நிறைவேற்றப்பட்டன.

இதனைத் தொடர்ந்து முதல்வர் விஜய்யின் பதிலுரை இருந்தது. முதல்வர் விஜய் பேசும்போது, திமுகவின் கடந்த கால ஆட்சியின்போது சர்க்காரியா ஊழல் தொடர்பான ஆவணங்களை வாசித்தார்.

வீராணம் குடிநீர் திட்டத்தை சத்யநாராயணா பிரதர்ஸ் நிறுவனத்துக்கு வழங்க அப்போதைய முதல்வர் கருணாநிதி யின் மருமகன் முரசொலி மாறன் 2.5% கமிஷன் கேட்டதாக ஆவணத்தில் இருப்பதாக அவர் வாசித்தார்.

மேலும், கடந்த திமுக ஆட்சியின்போது 7.5% – 10% வரை கட்சி நிதியாக கமிஷன் வாங்கியதற்கான ஆதாரத்தை அமலாக்க த்துறையே வழங்கியுள்ளதாக முதல்வர் விஜய் தெரிவித்தார்.

மேலும், இந்த கட்சி நிதி மூலமாக நேரடியாக பலன் பெற்றவர்கள் முதல்வர்கள் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி உள்ளிட்டோர் என்பதை அமலாக்கத்துறை ஆவணம் தெரிவித்துள்ளதாகவும் விஜய் குறிப்பிட்டார்.

முதல்வரின் இந்த பேச்சுக்கு திமுக உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் தொடர்ந்து எழுந்து நின்ற வண்ணம் இருந்தனர்.

எனினும், முதல்வர் தொடர்ந்து தனது உரையை தொடர்ந்தார். திமுகவினரால் தமிழகத்தில் ஆபாச நதி, வன்ம நதி ஆறாக ஓடிக்கொண்டிருப்பதாகவும், இதை அவர்கள் நியாயப் படுத்துவதாகவும் முதல்வர் குற்றம் சாட்டினார்.

அந்த காலத்து அரசியலில் இருந்த நல்லதை மட்டுமே எடுத்துக்கொள்வோம் என்றும், ஆபாசமான, அவதூறான, துருப்பிடிச்ச அரசியல் நமக்கு எதற்கு என்றும் முதல்வர் கேள்வி எழுப்பினார்.

மேலும், “பேசிப் பழகிய பொய், வாங்கி பழகிய கை, போட்டுப் பழகிய பை” என்று கண்ணதாசன் கூறி இருக்கிறார். இதுதான் திமுக; இவ்வளவுதான் திமுக என்றும் முதல்வர் தெரிவித்தார்.

திமுகவினர் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதால், அவர்கள் மீது அவை விதிகளின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவை முன்னவர் செங்கோட்டையன் வேண்டுகோள் விடுத்தார்.

இதையடுத்துப் பேசிய சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர், முதல்வர் பேசுவதை தடுக்க வேண்டும் என்ற நோக்கோடு நீங்கள் நடந்து கொள்கிறீர்கள்; இதை அனுமதிக்க முடியாது என்றார்.

அப்போது, திமுக உறுப்பினர்கள் சபாநாயகர் இருக்கை முன்பாக அமர்ந்து அமளியில் ஈடுபட்டனர். முதல்வரின் உரைக்கு பதில் அளிக்க எதிர்க்கட்சித் தலைவருக்கு வாய்ப்பு வழங்க வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினர்.

முதல்வரின் பேச்சை முடக்க வேண்டும் என்ற நோக்கோடு நீங்கள் செயல்பட்டதால் உங்களுக்கு வாய்ப்பு அளிக்க முடியாது என சபாநாயகர் தெரிவித்தார்.

பின்னர் பேசிய முதல்வர் விஜய், அனுமதி கொடுங்கள் என கேட்டுக்கொண்டார். இதையடுத்து, அனுமதி கொடுப்பதாக சபாநாயகர் கூறினார்.

எனினும், அவர் பேசிய சில கருத்துக்களுக்கு திமுகவினர் எதிர்ப்பு தெரிவித்ததால், அனுமதி கொடுக்க முடியாது என சபாநாயகர் திட்டவட்டமாகக் கூறினார்.

சபாநாயகரின் இந்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுகவினர் வெளிநடப்பு செய்தனர்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *