சென்னை:
“பெண்களைப் பற்றி மிக மிக கொச்சையாக பதிவு போடும் தவெகவினரை முதல்வர் விஜய் கண்டிக்க வேண்டும்” என சட்டப்பேரவையில் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
சட்டப்பேரவையில் இது குறித்து அவர் பேசுகையில், “பெண்கள் குறித்து யாரும் தவறாக பேசக் கூடாது; பேசினால் நடவடிக்கை எடுப்பேன்” என முதல்வர் விஜய் கூறிய கருத்தை வரவேற்கிறேன்; அவர் சொன்ன கருத்து எல்லோருக்கும் பொதுவான கருத்தாக இருக்க வேண்டும்.
பெண் தலைவர்கள், பெண்களைப் பற்றி சமூக வலைதளங் களில் மிக மிகக் கொச்சையாகவும் தவறாகவும் பதிவு செய்பவர்களில் தவெகவினரும் இருக்கிறார்கள்; அவர்களையும் முதல்வர் நிச்சயம் கண்டிக்க வேண்டும்“ என்று பேசினார்.
இதற்குப் பதிலளித்து பேசிய அமைச்சர் நிர்மல் குமார், “ஒரு சிலர் எங்கள் கட்சி பெயரில் போலி ஐடிகள் உருவாக்கி பேசுகிறார்கள். திமுகவினர் தொடர்ந்து இது போல செய்து கொண்டு இருக்கிறார்கள்.
கேப்டன் விஜயகாந்திற்கு என்ன என்ன சங்கடம் ஏற்படுத்தி னார்களோ, அதைத்தான் எங்களுக்கும் செய்கிறார்கள்.
தவெகவில் யார் தவறாகப் பேசினாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது” என்று பதிலளித்தார்.
பின்னர் பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்களிடத்தில் பேசுகையில், “இன்றைக்கு சட்டப்பேரவை முடிவதற்குள் காவல் துறைக்கு முதல்வர் நல்ல அறிவிப்புகளை வெளியிட வேண்டும்” இவ்வாறு அவர் பேசினார்.