சென்னை:
நாட்டில் உள்ள சமூக நோய்களுக்கும் மருந்து கண்டுபிடித்து சிகிச்சை அளிக்க வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கலைஞர் டிவி செய்திப் பிரிவுத் தலைவர் திருமாவேலன் மகள் அமிர்தா – ரபிந்திரன் திருமணம் சென்னையில் நேற்று நடைபெற்றது.
இதில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார். பின்னர், மு.க.ஸ்டாலின் பேசியதாவது: திருக்குறள் நெறிப்படி இந்த மணவிழா நடந்துள்ளது.
இதுதான் தமிழர் நெறி, தமிழர் பண்பாடு. இதைத்தான் திராவிட இயக்கம் நூறாண்டு காலமாக வலியுறுத்தி, தொடர்ந்து நிறைவேற்றி செயல்படுத்தி வருகிறது.
கடந்த 1967-ம் ஆண்டுக்கு முன்பு இதுபோன்ற சுயமரியாதை திருமணங்கள் சட்டப்படி செல்லுபடியாகும் என்ற அங்கீகாரம் இல்லாமல் இருந்தது.
முதன்முதலில் ஒரு மாநிலக் கட்சி தமிழகத்தில் ஆட்சிப் பொறுப்பேற்று, திமுக ஆட்சி உதயமாகி, 1967-ல் அண்ணா முதல்வராகப் பொறுப்பேற்றார்.
சட்டப்பேரவைக்குச் சென்று, தமிழகத்துக்காக முத்தான 3 திட்டங்களை நிறைவேற்றித் தந்தார்.
ஒன்று, இருமொழிக் கொள்கை. இன்னொன்று, தமிழகத்துக்கு ‘தமிழ்நாடு’ என்று பெயர் சூட்டக் கூடிய நிகழ்வு. அடுத்தது, சுயமரியாதை திருமணங்கள் செல்லுபடியாவதற்கான சட்டம்.
அண்ணாவால் சட்ட அங்கீகாரம் பெற்றுத் தரப்பட்ட சுயமரியாதை திருமணம்தான் இங்கு நடந்துள்ளது. இல்வாழ்க்கை என்பது அன்பும், அறனும் கொண்டதாக அமைய வேண்டும் என்று கூறியுள்ளார் திருவள்ளுவர்.
இங்கு மணமக்கள் இருவருமே மருத்துவர்கள். அவர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
மனிதர்களின் நோய்க்கு எப்படி மருந் துகளைக் கண்டுபிடித்து சிகிச்சை வழங்கி வருகிறீர்களோ, அதுபோல இன்றைக்கு நாட்டில் உள்ள ‘சமூக நோய்க்கும்’ மருந்து கண்டுபிடித்து, அதற்கும் நீங்கள் சிகிச்சை அளிக்க வேண்டும்.
அந்த பணியை நிறைவேற்றும் கடமையை நீங்கள் நிறைவேற்றித் தர வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
உங்களுக்கு ஆண், பெண் என எந்தக் குழந்தை பிறந்தாலும், அழகான தமிழ்ப் பெயரைச் சூட்டுங்கள். இவ்வாறு அவர் பேசினார்.