சமீப காலமாக திரையுலக பிரபலங்கள் அரசியல் தலைவர்கள், விளையாட்டு வீரர்களின் வாழ்க்கை சினிமா படமாகி வருகிறது.
இசையமைப்பாளர் இளையராஜா வாழ்க்கை வரலாற்று படத்தில் தனுஷ், இளையராஜா கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
அந்த வகையில் ரஜினிகாந்த் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக உருவாக இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
பெங்களூரில் போக்குவரத்து கழகத்தில் பஸ் கண்டக்டராக பணிபுரிந்து இயக்குனர் பாலசந்தரால் 1975-ம் ஆண்டு அபூர்வ ராகங்கள் படத்தில் சினிமாவில் அறிமுகமானார். 1978-ம் ஆண்டு வெளியான பைரவி படத்தின் மூலம் கதாநாயகனாக நடிக்க தொடங்கினார் ரஜினிகாந்த்.
தொடர்ந்து ஏராளமான படங்களில் நடித்து ‘சூப்பர் ஸ்டாரு யாருன்னு கேட்டா சின்ன குழந்தையும் சொல்லும்’ என்ற பாடலுக்கேற்ப திரை உலகில் உச்சத்தை தொட்டவர் ரஜினிகாந்த். 48 ஆண்டுகளாக தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாரா திகழ்ந்து வரும் ரஜினிகாந்த் தற்போது தனது 170-வது படமான வேட்டையன் படத்தில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் ரஜினிகாந்த் வாழ்க்கை வரலாறு சினிமாவாக உருவாக உள்ளது. பிரபல இந்தி தயாரிப்பாளர் சஜித்நாடியாவாலா ரஜினி வாழ்க்கை வரலாறு படத்தை தயாரிக்க இருக்கிறார். இதையொட்டி ரஜினிகாந்தை சில மாதங்களுக்கு முன்பு சந்தித்து பேசி உள்ளார்.
படத்திற்கான கதை எழுதும் பணிகள் தொடங்கி நடந்து வருகிறது. ரஜினிகாந்த் கதாபாத்திரத்தில் நடிக்க போவது யார்? மற்றும் படப்பிடிப்பு விபரங்கள் விரைவில் வெளியாக இருப்பதாக கூறப்படுகிறது.