சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜை காலத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் மாலையணிந்து விரதம் இருந்து சாமி தரிசனம் செய்ய வருவார்கள். பக்தர்களின் எண்ணிக்கை ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்தபடியே இருப்பது சபரிமலையின் தனிச்சிறப்பாகும்.
இந்த ஆண்டுக்கான மண்டல பூஜை அடுத்தமாதம் (நவம்பர்) 17-ந்தேதி தொடங்குகிறது. இதற்காக நவம்பர் 16-ந்தேதி மாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்படுகிறது. மண்டல பூஜை டிசம்பர் மாதம் 27-ந்தேதி நடைபெறுகிறது.
இதனால் நவம்பர் 17-ந்தேதி முதல் டிசம்பர் 27-ந்தேதி வரை கோவில் நடை திறந்திருக்கும். தினமும் வழக்கமான பூஜைகள் மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெறும். அந்த நாட்களில் பக்தர்கள் நெய் அபிஷேகம் செய்து சாமி தரிசனம் செய்யலாம்.
சபரிமலையில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய கடந்த சில ஆண்டுகளாக ஆன்லைன் முன்பதிவு முறை கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டும் அந்த முறை அமல்படுத்தப்படுகிறது.
ஆன்லைன் முன்பதிவு (மெய் நிகர் வரிசை) மூலமாக 70 ஆயிரம் பேர், ஸ்பாட் புக்கிங் (உடனடி முன்பதிவு) மூலமாக 20 ஆயிரம் பேர் என தினமும் 90 ஆயிரம் பேர் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகிறார்கள்.
மண்டல பூஜை காலம் மட்டுமின்றி, மகரவிளக்கு பூஜை காலத்திலும் இந்த முறை அமல்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இந்தநிலையில் மண்டல பூஜை காலத்தில் சபரிமலையில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்வதற்கான ஆன்லைன் முன்பதிவு நாளை (1-ந்தேதி) தொடங்குகிறது.
பக்தர்கள் தாங்கள் சாமி தரிசனம் செய்ய வரக்கூடிய தினத்தை தேர்வு செய்து, கேட்கக்கூடிய ஆவணங்களை பதிவிறக்கம் செய்து முன்பதிவு செய்யலாம். முன்பதிவு செய்ததற்கான அனுமதி சீட்டு புக்கிங் செய்யக்கூடிய இ-மெயில் முகவரிக்கு அனுப்பப்படும்.
ஆன்லைன் முன்பதிவுக்கு இதுவரை கட்டணம் எதுவும் வசூலிக்கப்படவில்லை. ஆனால் இந்த ஆண்டு ஆன்லைன் முன்பதிவு செய்யும் பக்தர்களிடமிருந்து ரூ.5 கட்டணம் வசூலிக்கப்பட உள்ளது.
சபரிமலைக்கு சாமி தரிசனம் செய்ய வரக்கூடிய பக்தர்கள் மரணமடைந்தால், அவர்களது குடும்பத்திற்கு ரூ.3லட்சம் இன்சூரன்சு வழங்க முடிவு செய்யப்பட்டு இருக்கிறது.
இதன் காரணமாக ஆன்லைன் முன்பதிவு செய்யும் பக்தர்களிடம் 5 ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்பட உள்ளது.
ஆனால் இது கட்டாயமில்லை எனவும், விருப்பம் உள்ளவர்கள் மட்டும் இந்த கட்டணதை செலுத்தலாம். அதற்கு தகுந்தாற்போல் ஆன்லைன் முன்பதிவில் சில மாற்றங்கள் செய்யப்பட்டிருக்கிறது.