திண்டுக்கல் பள்ளி குடிநீர் தொட்டியில் மனிதக் கழிவு கலந்ததற்கு மாணவர்களை காரணம் சொல்வதை ஏற்க முடியாது – உயர் நீதிமன்ற மதுரை அமர்வு!!

மதுரை:
திண்டுக்கல் பள்ளி குடிநீர் தொட்டியில் மனிதக் கழிவு கலந்ததற்கு மாணவர்களை காரணம் சொல்வதை ஏற்க முடியாது என உயர் நீதிமன்ற மதுரை அமர்வு கூறியுள்ளது.

மதுரையைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனு: திண்டுக்கல் மானூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி மாணவர்கள் பயன்படுத்தும் தண்ணீர்த் தொட்டிக்குள் மனிதக் கழிவு கலந்த விவகாரம் தொடர்பாக விசாரிக்க தனி குழு அமைக்க உத்தரவிட வேண்டும்.

மேலும், குற்றத்தில் ஈடுபட்ட நபர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் தடுக்க, உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் வேல்முருகன், பூர்ணிமா அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அரசுத் தரப்பில், ‘தண்ணீர் தொட்டியில், 6-ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் விளையாட்டுத்தனமாக மனிதக் கழிவு கலந்துள்ளனர். விசாரணை நடைபெற்று வருகிறது’ எனத் தெரிவிக்கப்பட்டது.

அதையடுத்து நீதிபதிகள், “குடிநீர் தொட்டியில் மனிதக் கழிவு கலப்பது, வாடிக்கையாக உள்ளது. அதற்கு மாணவர்களை காரணம் காட்டுவது ஏற்கத்தக்கதாக இல்லை.

விசாரணையின் நிலை என்ன என்பது குறித்த நிலை அறிக்கையை திண்டுக்கல் எஸ்.பி தாக்கல் செய்ய வேண்டும்.

இதுபோன்ற நிகழ்வுகளை தடுக்க அரசு பள்ளிகளில், குறிப்பாக ஆதி திராவிட பள்ளிகளில் சிசிடிவி கேமராக்களை பொறுத்த இயலுமா?

அதற்கு ஆகும் செலவு என்ன என்பது குறித்து அரசிடம் தகவல் பெற்று நீதிமன்றத்துக்கு தெரிவிக்க வேண்டும்’ என்று உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தனர்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *