பாராளுமன்றத்துக்கு 7 கட்டமாக தேர்தல் நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதன்படி முதல் கட்டமாக 102 தொகுதிகளுக்கு கடந்த மாதம் 19-ம் தேதியும், 2-ம் கட்டமாக 88 தொகுதிகளுக்கு கடந்த மாதம் 26-ம் தேதியும் வாக்குப்பதிவு நடந்தது. மூன்றாம் கட்டமாக 93 தொகுதிகளுக்கு கடந்த 7-ம் தேதி தேர்தல் நடைபெற்றது.
இன்று 4வது கட்ட வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. அத்துடன் ஆந்திர மாநில சட்டசபை தேர்தலும் தொடங்கியது. காலை முதலே வாக்காளர்கள் வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர்.
அப்போது அங்கு வந்த ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் எம்.எல்.ஏ. சிவக்குமார் வாக்களிக்க வரிசையில் நிற்காமல் நேரடியாக சென்று வாக்குப்பதிவு செய்ய முயன்றதாக தெரகிறது. அப்போது, வரிசையில் சென்று வாக்களிக்க செல்வதை சுட்டிக்காட்டிய வாக்காளரை எம்.எல்.ஏ. கன்னத்தில் அறைய, பதிலடியாக எம்.எல்.ஏ.வை திருப்பி அடித்துள்ளார் வாக்காளர்.
எம்.எல்.ஏ. சிவக்குமார் தாக்கப்பட்டதை கண்ட ஆதரவாளர்கள் கூட்டாக சேர்ந்து வாக்களிக்க வந்தவரை தாக்கினர். தேர்தல் பாதுகாப்புக்கு வந்த போலீசார் மோதல் சம்பவத்தை தடுத்து, பின்னர் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த தாக்குதலில் வாக்களர் பலத்த காயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
ஆந்திராவில் தேர்தல் நடைபெற்று வரும் நிலையில் இந்த மோதல் சம்பவம் அப்பகுதியில் வாக்களிக்க வந்தவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.