திருநள்ளாறு சனீஸ்வர பகவான் கோவில் தேரோட்டம்!!

காரைக்கால்:
காரைக்காலை அடுத்த திருநள்ளாறு சனீஸ்வரர் கோவிலில் இன்று காலை தேரோட்டம் நடைபெற்றது.

காரைக்காலை அடுத்த திருநள்ளாறு தர்ப்பாரண்யேஸ்வரர் கோவிலில் சனி பகவான் கிழக்கு நோக்கி தனி சன்னதி கொண்டு அருள்பாலித்து வருகிறார். இக்கோவிலில் சனிக்கிழமை தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்களும், சனிப்பெயர்ச்சியின் போது லட்சக்கணக்கான பக்தர்களும் வருகை தந்து சாமி தரிசனம் செய்வது வழக்கம்.

இத்தகைய சிறப்பு வாய்ந்த கோவிலில் பிரம்மோற்சவ விழா ஆண்டுதோறும் சிறப்பாக நடைபெறுவது வழக்கம். நடப்பாண்டு பிரம்மோற்சவ விழா கடந்த 5-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து விநாயகர் உற்சவம், சுப்பிரமணியர் உற்சவம் நடை பெற்றுவந்தது.

விழாவின் முக்கியநிகழ்வுகளில் ஒன்றான அடியார்கள் நால்வர் (சுந்தரர், திருஞானசம்பந்தர், மாணிக்கவாசர், திருநாவுக்கரசர் ) புஷ்ப பல்லக்கு வீதியுலா கடந்த 13-ந் தேதி இரவு நடை பெற்றது. தொடர்ந்து 17-ந் தேதி இரவு பஞ்சமூர்த்திகள் வாகனரூடராய் சகோபுர வீதியுலா(தங்க ரிஷப வாகன காட்சி), சிறப்பாக நடைபெற்றது.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று காலை 5.30 மணிக்கு தொடங்கியது. முதல்தேரில் விநாயகரும், 2-வது தேரில் முருகப்பெருமானும், 3-வது தேரில் சென்ப கத்தியாகராஜ சுவாமியும், 4-வது தேரில் நீலோத்பா லாம்பாளும், 5-வதுதேரில் சண்டிகேஸ்வரும் வரிசையாக கொண்டு செல்லப் பட்டது. காலை 9 மணிக்கு செண்பக தியாகராஜசுவாமி திருத்தேரிலிருந்து எண் கால் மண்டபத்திற்கு எழுந்திரும் நிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழ்ச்சியில், புதுச்சேரி அமைச்சர் சாய் ஜெ. சரவணன் குமார், தொகுதி எம்.எல்.ஏ.சிவா, பா. ஜனதா மாநில துணைத் தலைவர் ராஜசேகரன், கோவில் நிர்வாக அதிகாரி அருணகிரிநாதன், கட்டளை விசாரணை கந்தசாமி தம்பிரான்சுவாமிகள் உள்ளிட்ட திரளான பக்தர்கள் கலந்து கொண்டு, தேரை வடம் பிடித்து இழுத்து சாமி தரிசனம் செய்தனர்.

20-ந் தேதி சனிபகவான் தங்க காக்கை வாகனத்தில் வீதியுலாவும், 21-ந் தேதி தெப்போற்சவமும் நடை பெற உள்ளது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரி அருணகிரி நாதன் தலைமையில் ஊழி யர்கள் செய்து வருகின்றனர்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *