சென்னை மதுரவாயலில் மாநகராட்சி குப்பை சேகரிக்கும் பேட்டரி வாகனம் ஆளில்லாமால் ஓடியதால் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை மதுரவாயல் ஆலப்பாக்கம் பெருமாள் கோயில் தெருவில் வசிப்பவர் ஆறுமுகம் (55). இவர் இன்று காலை ஆலப்பாக்கம் பிரதான சாலையில் சென்று கொண்டிருந்தபோது, ஓட்டுனர் இன்றி தானாக வந்த குப்பை சேகரிக்கும் சென்னை மாநகராட்சி வாகனம் மோதியது.
இதில் தலை மற்றும் காலில் பலத்த காயம் ஏற்பட்டு ஆறுமுகம் வளசரவாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு தலையில் நான்கு தையல்கள் போடப்பட்டுள்ளன.
இதே போல் அடுத்தடுத்து 2 இருசக்கர வாகனம் மீது மோதியது. இதில் இருசக்கர வாகனத்தில் வந்தவர்களுக்கு சிறிய காயம் ஏற்பட்டது. இந்த விபத்தில் குப்பை பேட்டரி வாகனம் முன் பகுதி முற்றிலும் சிதைந்துள்ளது.
இது தொடர்பாக மதுரவாயில் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. பேட்டரி வாகனத்தை ஓட்டி வந்த மாநகராட்சி ஒப்பந்த பணியாளர் வாகனத்தை ஆப் செய்யாமல் சாலையோரம் நிறுத்திவிட்டி சென்றுள்ளார்.
அப்போது திடீரென வாகனம் தானாகவே தறிக்கெட்டு ஓடி விபத்து ஏற்பட்டுள்ளது. இது அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இது குறித்த சிசிடிவி காட்சிகளுக்கும் தற்போது வெளியாகியுள்ளது.