தென்பெண்ணை ஆற்றில் கழிவுநீரைக் கலக்க அனுமதிக்கும் கர்நாடக அரசைக் கண்டித்து சீமான் கண்டனம்!!

தென்பெண்ணை ஆற்றில் கழிவுநீரைக் கலக்க அனுமதிக்கும் கர்நாடக அரசைக் கண்டிப்பதோடு, கழிவுநீர் கலப்பதை உடனடியாக நிறுத்தக்கோரி நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்க வேண்டும் என்று சீமான் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில், கர்நாடாகாவில் அமைந்துள்ள தொழிற்சாலைகள் தென்பெண்ணை ஆற்றின் நீர் பிடிப்பு பகுதிகளில் கழிவுநீரைக் கலந்துவிடுவதால் ஆற்றுநீர் முற்றாக நாசமடைந்துள்ளது வேதனையளிக்கிறது.

கழிவுநீர் கலப்பதைத் தடுக்கத்தவறி, வேடிக்கைப் பார்க்கும் தமிழ்நாடு அரசின் அலட்சியப்போக்கு வன்மையான கண்டனத்துக்குரியது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள தென்பெண்ணை ஆற்றின் அணையில் தேக்கப்படும் பாசனநீரால் பல்லாயிரக்கணக்கான ஏக்கர் வேளாண் நிலங்கள் பாசன வசதிப்பெறுவதோடு ஆற்றுப்படுகையிலுள்ள கிராமங்களின் குடிநீர்த் தேவையையும் நிறைவு செய்கிறது.

மேலும், அணையின் நீர்த்தேக்கப்பகுதியில் மீனவர்கள் மீன்பிடித்தொழிலிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

ஆனால், பருவமழை பொய்த்தது மற்றும் கடும் வெப்பநிலை காரணமாக தென்பெண்ணை ஆற்றில் நீர்வரத்து முற்றாக குறைந்துவிட்டது.

தற்போது மீண்டும் மழைபெய்ய தொடங்கியுள்ள நிலையில் மிகக்குறைவான அளவிலேயே நீர்வரத்து உள்ளது. ஆனால், கர்நாடகாவிலுள்ள தொழிற்சாலைகள் கரிமக் கழிவுநீரை தென்பெண்ணை ஆற்றில் கலக்கச்செய்வதால் நீரானது முற்றாக மாசடைந்து மீன்கள் செத்து மிதக்கின்றன.

ஆற்றுநீரை பாசனத்திற்கோ, குடிநீருக்கோ பயன்படுத்த முடியாமல் மக்கள் பெரிதும் தவித்து வருகின்றனர்.

வேளாண் பெருங்குடி மக்கள் இது குறித்து திமுக அரசிடம் பலமுறை முறையிட்டும் கழிவுநீரைத் தடுப்பதற்கு திமுக அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பது பெருங்கொடுமையாகும்.

தற்போது, தென்பெண்ணை ஆற்றுநீரை ஆய்வு செய்ததில் நீரின் காரத்தன்மை மற்றும் அம்மோனியா, நைட்ரேட் ஆகியவற்றின் அளவுகள் அதிகரித்தும், ஆக்சிசன் அளவு குறைந்தும் உள்ளது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

இதன் மூலம் தென்பெண்ணை ஆற்றில் கர்நாடக தொழிற்சாலை கழிவுகள் கலப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ஆற்றுநீரில் இதுபோன்ற தொழிற்சாலை கழிவுகளைக் கலப்பதென்பது அப்பட்டமான நதிநீர் சட்ட விதிமீறலாகும்.

தொழிற்சாலை கழிவுகள் கலப்பதால் தென்பெண்ணை ஆறு பாயும் தமிழ்நாட்டின் 7 மாவட்டங்களிலுள்ள நிலம், நீர், சுற்றுச்சூழல் ஆகியவைச் சீர்கெடுவதோடு பொதுமக்களின் உடல் நலனும் பாதிக்கப்படுகின்ற பேராபத்தும் ஏற்பட்டுள்ளது.

ஆகவே, தென்பெண்ணை ஆற்றில் கழிவுநீரைக் கலக்க அனுமதிக்கும் கர்நாடக அரசைக் கண்டிப்பதோடு, கழிவுநீர் கலப்பதை உடனடியாக நிறுத்தக்கோரி நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்க வேண்டுமெனவும் நாம் தமிழர் கட்சி சார்பாக தமிழ்நாடு அரசை வலியுறுத்துகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *