அரசு பேருந்துகளில் காவல்துறையின ருக்கு இலவச பயணச் சலுகை வழங்க வேண்டும் – வானதி சீனிவாசன் வலியுறுத்தல்!!

காவல்துறையினர் அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்கள் இடையிலான மோதலை திமுக அரசு வேடிக்கை பார்ப்பது ஆபத்தானது என்று வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், நாகர்கோவிலில் இருந்து தூத்துக்குடி சென்ற அரசு பேருந்தில் பயணித்த காவலர் ஒருவர், பயணச்சீட்டு எடுக்க மறுத்து நடத்துனருடன் வாக்குவாதம் செய்த வீடியோ வெளியாகி தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

அதைத் தொடர்ந்து, “காவல்துறையினருக்கு அரசு பேருந்துகளில் இலவச பயணச் சலுகை இல்லை. அவர்களும் மற்றவர்களைப் போல பயணச் சீட்டு கட்டாயம் எடுக்க வேண்டும்” என போக்குவரத்து துறை அதிகாரிகள் அறிவிக்க, இந்த விவகாரம் காவல்துறை போக்குவரத்துக் கழகங்கள் இடையிலான மோதலாக மாறியுள்ளது.

அரசுப் பழிக்குப் பழி தீர்ப்பது போல பல்வேறு விதிமீறல்களை காரணம் காட்டி அரசு பேருந்து ஓட்டுநர்கள், நடத்துனர்களுக்கு காவல்துறையினர் அபராதம் விதித்து வருகின்றனர். அரசின் இரண்டு முக்கிய துறைகளைச் சேர்ந்தவர்கள் இப்படி பகிரங்கமாக மோதிக் கொள்வது அரசின் செயல்பாட்டையே சீர்குலைத்து விடும். மக்களுக்கு பெரும் துன்பத்தை தரும்.

காவல்துறையினருக்கு குறிப்பாக காவலர்களுக்கு, அரசுப் பேருந்துகளில் இலவச பயணச் சலுகை வழங்க வேண்டும் என்பது அவர்களின் நீண்டகால கோரிக்கை. இதை நிறைவேற்றுவோம் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்திருந்தார்.

ஆனாலும், காவலர்களுக்கு இலவச பயணச் சலுகை நடைமுறைக்கு வரவில்லை. இதுதான் பிரச்னைக்கு முக்கிய காரணம்.

அரசு நிர்வாகம் வெளிப்படையாக, நியாயமாக சட்டத்தின்படி இயங்க வேண்டுமானால் அரசுத் துறைகளில் உள்ளவர்கள் சட்டத்தின்படி நடக்க வேண்டும். ஒரு பிரச்னை வந்த பிறகு, ஒரு தரப்பை பழி வாங்குவதற்காக சட்டத்தை பயன்படுத்தி நடவடிக்கை எடுப்பது சரியல்ல. அப்படியெனில் இதுவரை சட்ட மீறல்களை காவல்துறை வேடிக்கை பார்த்துள்ளது என்பது தெளிவாகிறது. இப்போது போக்குவரத்து கழகங்களை விட நாங்கள் உயர்ந்தவர்கள் என்பதை காட்டுவதற்காக அரசு பேருந்து ஓட்டுனர்கள், நடத்துனர்கள் மீது காவல்துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

காவல்துறையினர் அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்கள் மோதலை முடிவுக்கு கொண்டு வர வேண்டியது மாநில அரசின் கடமை. ஆனால், திமுக அரசு இதை கண்டுகொள்ளாமல் மவுனமாக வேடிக்கைப் பார்ப்பது, இந்த மோதலை ரசிப்பது போல இருக்கிறது. இது மிகவும் ஆபத்தானது.

அரசு துறைகள் ஒவ்வொன்றுக்கும் இடையே நல்லிணக்கம் இருக்க வேண்டும். அதே நேரத்தில், யார் விதிகளை மீறினாலும் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். பழிவாங்குவதற்காக மட்டும் நடவடிக்கை எடுக்க கூடாது.

முதல்வர் ஸ்டாலின் இப்பிரச்னையில் தலையிட்டு காவல்துறையினர் அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்கள் இடையிலான மோதலை முடிவுக்கு கொண்டு வர வேண்டும். ஏற்கனவே அளித்த வாக்குறுதியின்படி அரசு பேருந்துகளில் காவல்துறையினருக்கு இலவச பயணச் சலுகை வழங்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *