வீட்டுக்குள் கிருஷ்ணரை அழைத்துவர இதை செய்யுங்கள்!

பகவான் கிருஷ்ணர் குழந்தை அவதாரமாக நம் வீட்டிற்கு வந்து அருள்பாலிப்பதே கோகுலாஷ்டமி பண்டிகையின் முக்கிய அம்சமும், நோக்கமும் ஆகும்.

அதனால்தான் கிருஷ்ண ஜெயந்தி அன்று வீட்டை கழுவி சுத்தம் செய்து அரிசி மாவில் கோலமிட்டு பூக்கள், மாவிலை தோரணங்களால் அழகுபடுத்துவர்.

வாசலில் தொடங்கி பூஜை அறை வரை குழந்தையின் பிஞ்சு பாத தடங்களை அரிசி மாவால் பதிப்பார்கள்.

ஆலிலை கிருஷ்ணன் தனது பிஞ்சு பாதங்களை அடிமேல் அடி வைத்து வீட்டிற்குள் தத்தித் தத்தி நடந்து வருவதாக ஐதீகம்.

கிருஷ்ணனின் படத்தை அலங்கரித்து மாலைகளும், மலர்களும் சூடி அவனுக்கு பிடித்தமான வெண்ணெய், இனிப்பு வகைகள், சீடை, முறுக்கு, தேன்குழல், பொங்கல், பால் பாயாசம் போன்ற நைவேத்யங்கள் படைத்து அவரவர் குடும்ப வழக்கப்படி விரதம் இருந்து பூஜைகள் செய்து பக்தி பாமாலைகள் பாடி வழிபட வேண்டும்.

அந்த நீலவண்ண கண்ணன் நம் இல்லம் வந்து அருள்புரிய சூடிக்கொடுத்த சுடர்க்கொடி ஆண்டாள் தனது திருப்பாவையில் இவ்வாறு பாடியருளியுள்ளார்.

‘மாயனை மன்னு வட மதுரை மைந்தனை

தூய பெருநீர் யமுனைத் துறைவனை

ஆயர் குலத்தினில் தோன்றும் அணிவிளக்கை

தாயை குடல் விளக்கஞ் செய்த தாமோதரனை

தூயோமாய் வந்து நாம் தூமலர் தூவித் தொழுது

வாயினாற்பாடி மனத்தினால் சிந்திக்க

போய பிழையும் புகு தருவானின்றன வும் தீயினில் தூசாகும் செப்பேலோ ரெம்பாவாய்.’

கிருஷ்ணனை இவ்வாறு பாடி வழிபட்டால் எல்லா விதமான தடைகளும், பிழைகளும் தீயினில் பட்ட தூசாக அழியும் என்று தனது திருப்பாவை பாசுரத்தில் கூறியுள்ளார்.

பாகவதத்தில் கண்ணனின் பிறப்பை விவரிக்கும் தசம ஸ்கந்தம் எனப்படும் பத்தாவது அத்தியாயத்தை ஒருவர் படிக்க, குடும்பத்தில் மற்றவர்கள் கேட்க வேண்டும்.

இதனால் பகவான் கிருஷ்ணரின் ஆசீர்வாதம் நமது இல்லத்திற்கும், உள்ளத்திற்கும் கிடைக்கும்.

கிராமங்களில் மாலை வேளையில்தான் கிருஷ்ண ஜெயந்தி பூஜை செய்வார்கள்.

வீட்டில் பூஜையும் நைவேத்தியமும் செய்து முடித்தபிறகு அருகே உள்ள கண்ணன் ஆலயத்துக்குச் சென்று இறைவனை வணங்கி மகிழ்வது சிறப்பு.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *