விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் எந்த கட்சிக்கும் ஆதரவு இல்லை – தமிழக வெற்றிக் கழகம் அறிவிப்பு!!

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் எந்த கட்சிக்கும் ஆதரவு இல்லை என தமிழக வெற்றிக் கழகம் அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக தமிழக வெற்றிக் கழகம் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக வெற்றிக் கழகத் தலைவர், தளபதி விஜய் அவர்கள், கடந்த பிப்ரவரி மாதம் 2ஆம் தேதி வெளியிட்ட கட்சித் தொடக்க அறிவிப்பிற்கான முதல் அறிக்கையிலேயே, எங்கள் கழகத்தின் அரசியல் நிலைப்பாடு குறித்துத் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார்.

கழகத் தலைவர் அவர்கள், விரைவில் கழகத்தின் கொள்கைகள், கோட்பாடுகள் மற்றும் செயல்திட்டங்களைத் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாட்டில் வெளியிட்டு, அதன் தொடர்ச்சியாகக் கழக உள்கட்டமைப்பு சார்ந்த பணிகள், தமிழகம் முழுவதும் மக்கள் சந்திப்புப் பயணங்கள் என்று, வரும் 2026ஆம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்றப் பொதுத் தேர்தலுக்கான ஆயத்தப் பணிகளை மேற்கொண்டு.

தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று, மக்கள் பணியாற்றுவது தான் நமது பிரதான இலக்கு என்று ஏற்கெனவே தெரிவித்துள்ளார்.

எனவே, அதுவரை இடைப்பட்ட காலத்தில் நடத்தப்படும் உள்ளாட்சித் தேர்தல் உள்பட எந்தத் தேர்தலிலும் தமிழக வெற்றிக் கழகம் போட்டியிடாது என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

குறிப்பாக, வருகிற ஜூலை 10ஆம் தேதி நடைபெற உள்ள விக்கிரவாண்டி சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில், தமிழக வெற்றிக் கழகம் போட்டியிடாது என்றும், எந்தக் கட்சிக்கும் ஆதரவு இல்லை என்றும், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் அவர்களின் அறிவுறுத்தலின் பேரில் தெரிவித்துக்கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *