மதுரை ;
மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே அம்பட்டையம்பட்டியைச் சேர்ந்தவர் முருகன். இவர் 7 ஏக்கர் விவசாய நிலத்தில் நெல்சாகுபடி செய்து கடந்த 14-ம் தேதி அம்பட்டையம்பட்டியில் உள்ள அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் விற்பனை செய்ய சென்றுள்ளார்.
அந்த கொள்முதல் நிலையத்தில் பில் கிளார்க்காக பணியாற்றி வந்த திருச்சி மாவட்டம் லால்குடியைச் சேர்ந்த ஜெகதீசன் என்பவர் நெல் மூட்டைகளை கொள்முதல் செய்ய ஒரு மூட்டைக்கு ரூ.40 வீதம் சுமார் 277 மூட்டைகளுக்கு 16,620 ரூபாயை முருகனிடம் லஞ்சமாக கேட்டதாக கூறப்படுகிறது.
இதனால் அதிர்ச்சியடைந்த முருகன் இது தொடர்பாக மதுரை மாவட்ட லஞ்ச ஒழிப்பு காவல்துறையிடம் புகார் அளித்துள்ளார்.
இதன் அடிப்படையில் லஞ்ச ஒழிப்பு காவல் துறையினர் ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை முருகனிடம் கொடுத்து அதை பில் கிளார்க் ஜெகதீசனிடம் வழங்கச் சொல்லியுள்ளனர்.
அதன்படி அவர் ஜெகதீசனிடம் பணத்தைக் கொடுக்கும் போது கையும் களவுமாக மதுரை மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி சத்தியசீலன் தலைமையிலான காவல் துறையினர் கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர். இச்சம்பவம் தொடர்பாக அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விவசாயியிடம் லஞ்சம் வாங்கிய பில் கிளார்க் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் உசிலம்பட்டி வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.