திமுக அரசை கண்டித்து பாஜக 22-ம் தேதி போராட்டம் – அண்ணாமலை அறிக்கை!!

பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-

கள்ளக்குறிச்சியில், கள்ளச் சாராயத்தினால் 35-க்கும் அதிகமான உயிர்கள் பறிபோயிருக்கின்றன என்ற செய்தி மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கிறது.

கள்ளக்குறிச்சிக்கு நேரில் சென்று, உயிரிழந்தவர்கள் குடும்பத் தினரையும், மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்களையும் சந்தித்து ஆறுதல் தெரிவிக்க உள்ளோம். அவர்கள் குடும்பத்தினருக்கு தமிழக பாஜக எப்போதும் உறுதுணையாக இருக்கும்.

திமுக ஆட்சியில் கடந்த இரண்டு ஆண்டுகளில் நடைபெற்றுள்ள கள்ளச் சாராய உயிரிழப்புகள், 1980 காலகட்டத்தில் ஏற்பட்டதைப் போல, தமிழகம் நாற்பது ஆண்டுகள் பின்னோக்கிச் செல்கிறதா என்ற அச்சத்தை ஏற்படுத்துகிறது.

நேற்றைய தினம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை அமைச்சரை பதவி விலக்கம் செய்ய, முதல்வர் ஸ்டாலினை கேட்டுக் கொண்டிருந்தோம்.

ஆனால், கடந்த இரண்டு ஆண்டுகளில் சுமார் 60 உயிர்கள் கள்ளச் சாராயத்தினால் பறிபோனதற்குப் பின்னரும், முதல்வராக தொடர தனக்குத் தார்மிக உரிமை உள்ளதா என்பதை, அவர் எண்ணிப் பார்க்க வேண்டும்.

தமிழகம் முழுவதும் கள்ளச் சாராய விற்பனையைத் தடுக்காமல், பல உயிர்கள் பலியாகும் வண்ணம், தொடர்ந்து மெத்தனப் போக்கில் செயல்பட்டு வரும் திமுக அரசின் கையாலாகாத் தனத்தைக் கண்டித்து, வரும் ஜூன் 22 அன்று, தமிழக பாஜக சார்பாக, மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது என்பதை அறிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *