”அடக்குமுறையை கண்டு அஞ்சுபவர்கள் அதிமுகவினர் அல்ல ” – ஈபிஎஸ் பரபரப்பு பேச்சு

கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம்,மாதவச்சேரி,சேஷசமுத்திரம் உள்ளிட்ட பகுதிகளில் விஷ சாராயம் அருந்தியதால் இதுவரை 58 நபர்கள் உயிரிழந்து உள்ள நிலையில் கள்ளக்குறிச்சி விஷ சாராய விவகாரத்தை கண்டித்தும் கள்ளக்குறிச்சி விஷ சாராயம் விவகாரத்திற்கு தார்மீக பொறுப்பேற்று தமிழக முதல்வர் பதவி விலக வேண்டும் என்பதை வலியுறுத்தியும் கள்ளக்குறிச்சி மாவட்ட அதிமுக சார்பில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் சிறப்புரையாற்றிய அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, “ கள்ளக்குறிச்சியில் நடந்த துயரமான சம்பவம் மிகுந்த வேதனை, அதிர்ச்சியளிக்கிறது திமுக பொறுப்பேற்ற 3 ஆண்டுகளில் போதைப்பொருள் விற்பனை, கள்ளச்சாராய மரணம் அதிகரித்துள்ளது.

கள்ளச்சாராய சிகிச்சைக்கு நான் ஒரு மருந்து சொன்னேன்; அந்த மருந்தை வைத்து அமைச்சர் மா.சுப்பிரமணியம் என்னை கிண்டல் செய்கிறார். ஒன்றும் தெரியாமல் இருக்க நான் ஒன்றும் ஸ்டாலின் அல்ல. இப்படிப்பட்ட அமைச்சர்கள் இருக்கும் வரை இந்த நாட்டை எவராலும் காப்பாற்ற முடியாது.

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணத்தைக் கண்டித்து மாநிலம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. காற்றை எப்படி தடை செய்யமுடியாதோ அப்படி மக்கள் உணர்வுகளுக்கு தடை விதிக்க முடியாது.

அதிமுக ஆர்ப்பாட்டத்திற்கு இடையூறு செய்து முதல்வர் அடக்குமுறையை கையாளுகிறார்.

கள்ளக்குறிச்சி மக்களுக்கு நீதி கிடைக்க சிபிஐ விசாரணை நடைபெற வேண்டும். கள்ளக்குறிச்சி விஷச்சாராய விவகாரம் தொடர்பாக சட்டமன்றத்தில் பேச முற்பட்ட போது அனுமதி கொடுக்கவில்லை.

முக்கியமான பிரச்னைகளை பேசுங்கள் என கூறுகின்றனர். இது முக்கியமான பிரச்னை இல்லையா?. கள்ளக்குறிச்சி உயிரிழப்பு விவகாரத்திற்கு திமுக அரசு தான் காரணம். இந்த விவகாரத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டு கொள்ளவில்லை.

ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கு வருபவர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்துகிறார்கள். அடக்குமுறையை கண்டு அஞ்சுபவர்கள் அதிமுகவினர் அல்ல. நீதி கிடைக்க வேண்டும் ஆனால் இங்குள்ள காவல்துறை, தனி நபர் ஆணையம் மூலம் நீதி கிடைக்காது” எனக் கூறினார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *