இஸ்ரேலுக்கும் காசாவிற்கும் இடையே கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தொடங்கிய போர் தற்போது வரை நடைபெற்று வருகிறது. இந்த போரில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் காசாவில் மட்டும் சுமார் 38 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர்.
காசாவின் நிலையை கண்டு உலக மக்கள் துயரத்தில் ஆழ்ந்துள்ள சூழலில் மனித உரிமை ஆர்வலர் வெளியிட்டுள்ள மற்றொரு அதிர்ச்சி தகவல் மனதை ரணமாக்கியுள்ளது.
அதாவது போரின் விளைவாக காசாவில் 21 ஆயிரம் சிறுவர்கள் காணாமல் போயிருப்பதாக தெரியவந்துள்ளது. மாயமானவர்களில் பலர் வெடிகுண்டால் தகர்க்கப்பட்ட கட்டடங்களின் இடிபாடுகளில் சிக்கி இறந்திருப்பதாகவும், மேலும் பல சிறுவர்களை இஸ்ரேல் ராணுவம் கொன்று புதைத்ததாகவும் கூறப்படுகிறது.
காணாமல் போன சிறுவர்கள், பெற்றோர் மற்றும் உறவினர்களை பிரிந்து தவித்து வருவதால் அவர்களை காப்பாற்ற உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் மனித உரிமை ஆர்வலர் அலெஸ்சான்ரா சையே வலியுறுத்தியுள்ளார்.