பெரியபாளையம் பவானி அம்மன், பாம்பன் சுவாமி உள்பட 65 கோவில்களில் கும்பாபிஷேகம்….

பெரியபாளையம்:
தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில் புனரமைப்பு, கும்பாபிஷேக விழாக்கள் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் பெரியபாளையம் பவானி அம்மன் கோவில் ரூ.1.52 கோடியிலும், திருவான்மியூர் பாம்பன் சுவாமி கோவிலில் ரூ.1.12 கோடியிலும் புனரமைப்பு பணிகள் நடைபெற்றன.

இதேபோல் பொன்னேரி ஞாயிறு கிராமத்தில் உள்ள புஷ்பரதேஸ்வர் கோவில், ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் (குருதலம்) கோவில், திருச்சி பூர்த்தி கோவில், திருமுக்தீஸ்வரர் கோவில் உள்ளிட்ட மொத்தம் 65 கோவில்களில் திருப்பணிகள் நடைபெற்று இன்று கும்பாபிஷேகம் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.

அதன்படி பெரியபாளையம் பவானி அம்மன் கோவில், திருவான்மியூர் பாம்பன் சுவாமி கோவில் உள்ளிட்ட 65 கோவில்களிலும் இன்று கும்பாபிஷேக விழா கோலாகலமாக நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

பெரியபாளையம்

பெரியபாளையம் பவானி அம்மன்கோவிலில் 16 ஆண்டுகளுக்குப் பின்னர் கும்பாபிஷேக விழா விமரிசையாக நடந்தது. கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு கடந்த புதன்கிழமை காலை முதல் சிறப்பு பூஜைகள், சிறப்பு ஹோமங்கள் நடைபெற்றது.

இன்று காலை மகா பூர்ணாஹூதி, யாத்ரா தானம் நடந்தது. பின்னர் புனித நீர் அடங்கிய கலசங்கள் பிரகார புறப்பாடு நடைபெற்றது. இதைத்தொடர்ந்து கோவில் கோபுரத்தில் புனித நீர் ஊற்றி மகா கும்பாபிஷேகம் நடந்தது.

இதில் பெரியபாளையம் மற்றும் அதனை சுற்றி உள்ள கிராம மக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். 500-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

பொன்னேரி

பொன்னேரி அடுத்த ஞாயிறு கிராமத்தில் உள்ள சூரிய பரிகார தலமான சொர்ணாம்பிகை சமேத புஷ்பரதேஸ்வரர் கோவில் கும்பாபிஷேக விழா சிறப்பாக நடைபெற்றது.

புனித கலசநீர் மேளதாளம் முழங்க ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு கோபுர கலசத்தின் மீது ஊற்றப்பட்டது. இதில் பொன்னேரி, சோழவரம், செங்குன்றம், மீஞ்சூர் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மீஞ்சூர் அடுத்த வல்லூர் ஸ்ரீதேவி பூதேவி நாயிகா சமேத வெங்கடேச பெருமாள் கோவில் கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற்றது.

திருவான்மியூர் பாம்பன் சுவாமி கோவிலில் கும்பாபிஷேக விழா இன்று காலை கோலாகலமாக நடந்தது. இந்த கோவிலில் 66 ஆண்டுகளுக்கு முன்பு கும்பாபிஷேகம் நடைபெற்று இருந்தது. பாலாலயம் செய்யப்பட்டு 36 ஆண்டுகள் கழித்து பல்வேறு சட்டப் போராட்டங்களுக்கு பிறகு கும்பாபிஷேகம் நடைபெற்று உள்ளது.

இதில் அமைச்சர்கள் சேகர்பாபு, தா.மோ.அன்பரசன் உள்ளிட்ட திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். சேத்துப்பட்டு கருகாத்தம்மன் கோவிலிலும் கும்பாபிஷேகம் நடைபெற்றது.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *