தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், 400 யூனிட் வரை பயன்படுத்தும் வீடுகளுக்கு யூனிட் ஒன்றுக்கு ரூ.4.60 காசுகள் வசூலிக்கப்பட்டு வந்த கட்டணம், தற்போது ரூ.4.80 காசுகளாக உயர்த்தப்பட்டுள்ளது. அதேபோல், 401 யூனிட் 500 யூனிட் வரையிலான வீடுகளுக்கான மின் கட்டணம், ரூ.6.15 காசுகளில் இருந்து ரூ.6.45 காசுகளாக உயர்த்தப்பட்டுள்ளது.
501 முதல் 600 யூனிட் வரையிலான வீடுகளுக்கான மின் கட்டணம், யூனிட் ஒன்றுக்கு ரூ.8.15 காசுகளில் இருந்து ரூ.8.55 காசுகளாக உயர்த்தப்பட்டுள்ளது. 601 முதல் 800 யூனிட் வரையிலான வீடுகளுக்கான மின் கட்டணம், யூனிட் ஒன்றுக்கு ரூ.9.20 காசுகளில் இருந்து ரூ.9.65 காசுகளாக உயர்த்தப்பட்டுள்ளது.
801 முதல் 1,000 யூனிட் வரையிலான வீடுகளுக்கான மின் கட்டணம், யூனிட் ஒன்றுக்கு ரூ.10.20 காசுகளில் இருந்து ரூ.10.70 காசுகளாக உயர்த்தப்பட்டுள்ளது. 1000 யூனிட்டுக்கு மேல் வீடுகளுக்கான மின் கட்டணம் யூனிட் ஒன்றுக்கு ரூ.11.25 காசுகளில் இருந்து ரூ.11.80 காசுகளாக உயர்த்தப்பட்டுள்ளது.
அடுக்குமாடி குடியிருப்புகளுக்கான மின் கட்டணம் யூனிட் ஒன்றுக்கு ரூ.8.15 காசுகளில் இருந்து ரூ.8.55 காசுகளாக உயர்த்தப்பட்டுள்ளது. கிராமப்புற குடிசை வீடுகளுக்கான மின் கட்டணம் யூனிட் ஒன்றுக்கு ரூ. 9.35 காசுகளில் இருந்து ரூ.9.80 காசுகளாக உயர்த்தப்பட்டுள்ளது.
ரயில்வே, ராணுவ வீரர் குடியிருப்புகளுக்கான மின் கட்டணம் யூனிட் ஒன்றுக்கு ரூ.8.15 காசுகளில் இருந்து ரூ.8.55 காசுகளாக உயர்த்தப்பட்டுள்ளது. 50 யூனிட்டுக்கு மேல் வணிக பயன்பாட்டுக்கான மின் கட்டணம் ஒரு யூனிட் ரூ. 9.70 காசுகளில் இருந்து ரூ.10.15 காசுகளாக உயர்த்தப்பட்டுள்ளது.
குடிசை, குறு நிறுவன மின் கட்டணம் 500 கிலோ வாட்டுக்கு மேல் யூனிட் ஒன்றுக்கு ரூ.6.95 காசுகளாக உயர்த்தப்பட்டுள்ளது. விசைத்தறிகளுக்கு 500 கிலோ வாட்டுக்கு மேல் யூனிட் ஒன்றுக்கு ரூ.7.65 காசுகளில் இருந்து ரூ.8 ஆக உயர்த்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2022 செப்டம்பர் மாதம் மின் கட்டணம் 30 சதவீதத்துக்கு மேல் உயர்த்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து, கடந்த 2023 ஜூலை மாதம் 2.18 சதவீதம் மின் கட்டணம் உயர்த்தப்பட்டது. தற்போது 4.83 சதவீத அளவில் மின் கட்டணத்தை தமிழக அரசு உயர்த்தியுள்ளது கவனிக்கத்தக்கது.