திருச்சி மாவட்டம் முக்கொம்பு மேலணையிலிருந்து பிரியும் காவிரியில் 35 ஆயிரம் கனஅடியும், கொள்ளிடம் ஆற்றில் 1.20 லட்சம் கனஅடியும் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. எனவே காவிரி, கொள்ளிடம் என 2 ஆறுகளிலும், தண்ணீர் இருகரைகளையும் தொட்டபடி ஆர்ப்பரித்து ஓடுகிறது. இந்நிலையில், இந்த இரண்டு ஆறுகளிலும் பொதுமக்கள் குளிக்க வேண்டாம் என திருச்சி மாநகர மற்றும் மாவட்ட காவல்துறை எச்சரித்துள்ளது.
இதுகுறித்து திருச்சி மாநகர காவல்துறை ஆணையர் என்.காமினி அறிக்கையில் கூறியது: மேட்டூர் அணையிலிருந்து அதிகப்படியான உபரி நீர் திறக்கப்பட்டுள்ளதால், முக்கொம்பு அணையிலிருந்து காவிரி, கொள்ளிடம் ஆறுகளில் அதிகளவு நீர் திறக்கப்பட்டுள்ளது.
எனவே காவிரி, கொள்ளிடம் ஆற்று கரையோர கிராமங்களில் உள்ள மக்கள், சலவைத் தொழிலாளர்கள் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். நீர்வரத்து விவரத்தை அவ்வப்போது தெரிந்துகொள்ளவும்.
தேவைப்பட்டால் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லமாறு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்படுகிறது. ஆற்றில் குளிக்கவோ, நீந்தவோ, மீன்பிடிக்கவோ அல்லது பொழுது போக்கவோ பொதுமக்களுக்கு அனுமதி இல்லை.
ஆற்றுப்பகுதிகளில் பாதுகாப்பற்ற கரையோரங்கள் மற்றும் ஆபத்தான பகுதிகளில் நின்றுகொண்டு பொதுமக்களோ அல்லது மாணவர்களோ செல்பி எடுக்க வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறது.
வெள்ளப்பெருக்கு காரணமாக பொதுமக்களுக்கு உதவிகள் தேவைப்பட்டாலோ, தகவல் ஏதும் அளிக்க நினைத்தாலோ நுண்ணறிவு பிரிவு 0431-2331929, 9498100615, வாட்ஸஅப் 9626273399, கட்டுப்பாட்டு அறை 0431 – 2418070, வாட்ஸ்அப் 9384039205 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளவும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.