திண்டுக்கல்லில் விடிய விடிய மழை கொட்டி தீர்த்தது!!

திண்டுக்கல்:
திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் நேற்று இரவு முதல் வெள்ளிக்கிழமை (இன்று) காலை வரை விடிய விடிய மழை கொட்டி தீர்த்தது. பழநியில் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் கடந்த 2 நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் நேற்று (டிச.12) இரவு முதல் வெள்ளிக்கிழமை (இன்று) காலை வரை மாவட்டம் முழுவதும் விடிய விடிய மழை கொட்டித் தீர்த்தது.

இதனால் திண்டுக்கல் மாவட்ட பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டது. பலத்த மழையால் அணைகள், நீர் நிலைகளுக்கு நீர் வரத்து அதிகரித்து வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. அணை மற்றும் ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கொடைக்கானலில் தாழ்வான பகுதிகள், சாலைகளில் மழைநீர் ஆறுபோல் பெருக்கெடுத்து ஓடியது. பல இடங்களில் மின் விநியோகமும் தடைபட்டது. கொடைக்கானலில் உள்ள காட்டாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் மலைக்கிராமங்கள் துண்டிக்கப்பட்டன.

அதனால் மலைக்கிராம மக்கள் வீடுகளிலேயே முடங்கியுள்ளனர். மழைக்கு பல இடங்களில் மின்கம்பங்கள், கொடைக்கானல், தாண்டிக்குடி மலைப்பகுதியில் ஆங்காங்கே மரங்கள் சாய்ந்து விழுந்தன.

பழநி – கொடைக்கானல் மலைச்சாலை, பழநி வண்டி வாய்க்கால் பகுதியில் மரங்கள் சாலையில் சாய்ந்து விழுந்தன. ஆடலூர் பன்றிமலை மலைச்சாலையில் பாறைகள் உருண்டு விழந்தன.

அதனால் போக்குவரத்து பாதித்தது. பழநி அருகே ஆயக்குடியில் மழைநீர் குடியிருப்பு பகுதியிலும், சில வீடுகளிலும் புகுந்தது. பாதிக்கப்பட்ட மக்கள் பாதுகாப்பான இடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இதே போல், பழநி அருகேயுள்ள கோம்பைப்பட்டியில் வாய்க்கால் கரை உடைந்து தண்ணீர் அருகிலுள்ள விளை நிலங்களுக்குள் புகுந்தது. அப்பகுதியில் இரவு முதல் இன்று ( வெள்ளிக்கிழமை) காலை வரை மின் விநியோகம் தடைபட்டது.

அதனால் பொதுமக்கள் மிகவும் சிரமப்பட்டனர். இடைவிடாத மழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதித்தது.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *