மதுரை:
மதுரை மாவட்டம் வாடிப்பட்டியில் பிளஸ் 2 தேர்வு எழுதிவிட்டு வரும் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகளுக்கு, அருகேயுள்ள ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் கூட்டத்திற்குள் புகுந்து பாலியல் தொல்லை கொடுக்கின்றனர். இதனை தடுக்க வேண்டும் என ஆட்சியரிடம் விவசாயி ஒருவர் கண்ணீர் மல்க புகார் தெரிவித்தார்.
மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (மார்ச் 21) மாவட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் ஆட்சியர் எம்.எஸ்.சங்கீதா தலைமையில் நடைபெற்றது. வேளாண் இணை இயக்குநர் ப.சுப்புராஜ், நீர்வளத்துறை கோட்ட செயற்பொறியாளர் பாரதிதாசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆட்சியரின் நேர்முக உதவியாளர் சாந்தி வரவேற்றார்.
இதில் மாவட்டம் முழுவதுமிருந்து விவசாயிகள் இக்கூட்டத்தில் பங்கேற்று தங்களது பிரச்சினைகள், கோரிக்கைகள் குறித்து பேசினர். கடந்த மாதம் அளித்த கோரிக்கை மனுக்கள் வாசிக்கப்பட்டு அதற்கு அதிகாரிகள் பதிலளித்துப் பேசினர்.
இதில் விவசாயிகள் பேசியதாவது: செல்லம்பட்டி பொன்.மணிகண்டன்: அரசு நெல்கொள்முதல் மையத்தில் நுகர்பொருள் வாணிபக்கழகத்தில் அதிக முறைகேடுகளில் ஈடுபடுகின்றனர்.
இதனை தவிர்க்கும் வகையில் மத்திய அரசின் சோதனை முறையில் தேசிய கூட்டுறவு நுகர்வோர் இணையம் நடத்துவதற்கு சோதனைமுறையில் அனுமதிக்க வேண்டும்.
ஆட்சியர்: கடந்த மாதம் விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். அதனால் அவர்களை அனுமதிக்க முடியாது.
பழனிச்சாமி: தேசிய நுகர்வோர் கூட்டுறவு இணையம் என்பது கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு சொந்தமானது. அவர்களை அனுமதிக்கக் கூடாது.
திருப்பதி: குலமங்கலத்தில் அரசு நெல்கொள்முதல் மையத்தில் முறைகேடுகளில் ஈடுபட்டவர்கள் குறித்து புகார் தெரிவித்திருந்தேன். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல், யார் திருட்டு குற்றத்தில் ஈடுபட்டவர்களிடமே கருத்து கேட்டு மையம் அமைக்காமல் நிறுத்தியுள்ளனர்.
சீத்தாராமன்: வாடிப்பட்டியில் அரசு நெல்கொள்முதல் மையத்தில் ஓய்வு டிஎஸ்பி தலைமையில் ஆளும்கட்சியினர் சேர்த்து ஒரு நெல் மூட்டைக்கு ரூ.70 வழிப்பறி செய்வது போல் விவசாயிகளிடம் கொள்ளையடிக்கின்றனர். இதுகுறித்து எழுத்துப்பூர்வமாக புகார் தெரிவித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை.
ஆட்சியர்: யாரிடம் மனு கொடுத்தீர்கள். மண்டல மேலாளர் ஓய்வு பெற்று விட்டார். அவருக்கு பதிலாக வந்தவரும் மாறுதலில் சென்றுள்ளார்.
அவருக்குப்பதிலாக பெண் அதிகாரியும் சொந்த விசயமாக விடுப்பில் சென்றுள்ளார். இதனால் நடவடிக்கை எடுப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. நானும் அந்தத் துறையில் வேலைபார்த்துள்ளேன். இப்போது கொடுங்கள் நடவடிக்கை எடுக்கிறேன்.
சீத்தாராமன்: வாடிப்பட்டியில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியும், பெண்கள் மேல்நிலைப்பள்ளியும் அருகருகே உள்ளது. தற்போது பிளஸ் 2 தேர்வு நடந்து வருகிறது. தேர்வு எழுதிவிட்டு வெளியே வரும் மாணவிகள் கூட்டத்தில் ஆண்கள் பள்ளி மாணவர்கள் புகுந்து மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுக்கின்றனர். நானே நேரடியாக பார்த்து தட்டிக்கேட்டேன்.
மாணவிகள் படும் கஷ்டத்தை வெளியில் சொல்ல முடியவில்லை எனக்கு கண்ணீர் வருகிறது. (கண்ணீர் விட்டு விம்மிக்கொண்டு பேச முடியாமல் நா தழுதழுத்தது, பக்கத்தில் இருந்தவர்கள் ஆசுவாசப்படுத்தினர்).
இதற்கு ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும். அங்குள்ள இரு பள்ளிகளைச் சேர்ந்த உடற்கல்வி ஆசிரியர்களும் இதை கண்டுகொள்வதில்லை. மாணவர்களின் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்துவதில்லை.
ஆட்சியர்: இப்போதே மதுரை மாவட்ட எஸ்பியிடம் பேசுகிறேன். உடனடியாக நடவடிக்கை எடுக்கிறேன் என்றார்.