திருப்பூர் மாவட்டம் உடுமலை மாரியம்மனுக்கு சுமார் 200 ஆண்டு கால வரலாற்று பெருமை உள்ளது.
உடுமலை நகரில் அமைந்துள்ள இந்த கோவிலில் மூல விக்ரகத்தின் முன் சுயம்புவாக எழுந்து அம்மன் அருள் பாலித்து வருவதோடு, நோய்களில் இருந்து காக்கும் தெய்வமாகவும் மாரியம்மனை பொதுமக்கள் வழிபட்டு வருகின்றனர்.
கண் புரை, அம்மை நோய், ஜூரம், வெயில் கொப்புளங்கள் ஆகியவையோடு வெப்பத்தால் ஏற்படும் அனைத்து நோய்களுக்கும் குணமும், குளுமையும் தந்து காப்பவள் என்ற பெருமையும் கொண்டவள் உடுமலை மாரியம்மன்.

அம்மை வார்க்கும்போது அம்மனை வழிபட்டு நோய் குணமாக பூச்சட்டி எடுத்தல், பூ மிதித்தல், அடி அளந்து கொடுத்தல், தீர்த்தம் கொடுத்தல் போன்ற நேர்த்திக் கடன்களை மக்கள் அம்மனுக்கு காணிக்கையாக்கி வழிபடுகின்றனர். சாதி பேதமின்றி அனைத்து சமயத்தினரும் உடுமலை மாரியம்மனை வணங்கி வழிபடுவது பெரிய சிறப்பாகும்.
மணமாகாத கன்னிப்பெண்கள் அம்மன் சந்நிதிக்கு வந்து தரிசனம் செய்தால் நல்ல வாழ்க்கை துணை கொடுப்பாள் இந்த அன்னை என்பது மக்களுடைய நம்பிக்கையாக இருந்து வருகிறது.
இத்தகைய சிறப்பு வாய்ந்த இந்த திருத்தலத்தில் தேர்த் திருவிழா ஆண்டுதோறும் பங்குனி, சித்திரை மாதங்களில் 15 நாட்கள் வெகு விமரிசையாக நடைபெறும். பங்குனி அமாவாசைக்கு அடுத்து வரும் செவ்வாய்க்கிழமை நோன்பு சாட்டுதல் நிகழ்ச்சி நடைபெறும்.
8-வது நாள் திருக்கம்பம் நடுதலும், மறுநாள் கொடியேற்று விழாவும் நடைபெறும். கொடி மர பூஜை, கொடி வஸ்திர பூஜை, அஸ்திர பூஜை ஆகியவைகள் செய்து கொடியேற்ற நிகழ்ச்சி நடப்பது வழக்கம்.
ஆத்மாவையும், தர்மத்தையும் கீழ் நிலையில் இருந்து உயர்நிலைக்கு கொண்டு செல்ல அன்னை கருணை இதயத்தோடு அருள்புரிய ஆயத்தமாக காத்திருக்கிறாள் என்பதையே கொடியேற்றுதல் நிகழ்ச்சி உலகிற்கு உணர்த்துகிறது.
திருவிழாவின்போது ஒவ்வொரு நாளும் எழுந்தருளும் அம்மன் சமம், விசாரம், சந்தோஷம், சாது, சங்கமம் என்ற நான்கு கால்களாக கொண்ட ரிஷபம், யானை, காமதேனு, சிங்கம், மயில், அன்னம், குதிரை உள்ளிட்ட வாகனங்களில் வீதி உலா வந்து பொதுமக்களுக்கு அருள் பாலிக்கிறாள்.
எண்ணிய எண்ணம் முடித்தல் வேண்டி அக்கினி சட்டி ஏந்தி அம்மனுக்கு நேர்த்திக் கடன் செலுத்துகின்றனர் பக்தர்கள். வாழ்வில் விளக்கேற்றிடும் அன்னைக்கு மாவிளக்கு எடுத்து பெண்கள் வழிபடுகின்றனர். திருவிழாவின்போது 15ம் நாள் அம்மனுக்கு திருக்கல்யாணம் நடைபெறுகிறது.
இந்த விழாக்களில் ஆண்டுதோறும் முக்கிய நிகழ்வாக பிரம்மிக்க வைக்கும் வகையில் திருத்தேரோட்டம் நடைபெறும்.
இந்த ஆண்டு இன்று நடைபெறும் தேரோட்ட நிகழ்ச்சிக்கு உடுமலை நகரம் மற்றும் மடத்துக்குளம் சுற்றுவட்டாரத்தில் உள்ள நூற்றுக்கணக்கான கிராமங்களில் இருந்து பக்தர்கள், பொதுமக்கள் கூடியுள்ளனர் என்பது சிறப்பான ஒன்றாகும்.