காஷ்மீரில் தாக்குதல் எதிரொலி – தமிழக சுற்றுலா பயணிகளுக்கு வேண்டிய உதவிகளை செய்து அவர்களை பத்திரமாக ஊருக்கு அழைத்து வர நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!!

ஜம்மு காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். 20 பேர் காயம் அடைந்தனர். இந்த தாக்குதலில் தமிழகத்தை சேர்ந்த 3 பேர் காயம் அடைந்து அங்குள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த நிலையில் அங்கு சுற்றுலா சென்றுள்ள தமிழக சுற்றுலாப் பயணிகள் அனைவரையும் பத்திரமாக அழைத்து வர தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார்.


அதன்படி தமிழ்நாட்டில் இருந்து காஷ்மீருக்கு சுற்றுலா சென்றிருந்தவர்கள் விவரம் சேகரிக்கப்பட்டது. இதில் விமானம் மற்றும் ரெயில்கள் மூலம் மொத்தம் 140 பேர் காஷ்மீர் சென்றிருந்தது தெரிய வந்தது.

இவர்கள் அனைவரும் காஷ்மீரில் பல்வேறு பகுதிகளில் தங்கி இருந்தனர். ஒவ்வொருவரும் அடுத்த வாரம் பல்வேறு தேதிகளில் திரும்பி வருவதற்காக டிக்கெட் முன்பதிவு செய்திருந்தனர்.


தற்போது அங்கு அசாதாரண சூழல் நிலவுவதால் ஒவ்வொருவரும் உடனே தமிழ்நாடு திரும்ப அறிவுறுத்தப்பட்டது.

அதன் பேரில் அங்கு சென்றிருந்த தமிழக சுற்றுலா பயணிகளுக்கு வேண்டிய உதவிகளை செய்து அவர்களை பத்திரமாக ஊருக்கு அழைத்து வர நடவடிக்கை மேற்கொள்ளுமாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு இருந்தார்.

இதையொட்டி டெல்லியில் உள்ள தமிழ்நாடு அரசு இல்லத்தில் உதவி மையம் அமைக்கப்பட்டு இருந்தது. அங்குள்ள பயணிகளை ஒருங்கிணைக்க புதுக்கோட்டை மாவட்ட கூடுதல் கலெக்டர் அல்தாப் ரசூ லையும் காஷ்மீருக்கு அரசு அனுப்பி வைத்தது.

இவரது சொந்த ஊர் காஷ்மீர் என்பதால் இவர் அங்குள்ள சுற்றுலா பயணிகளை வேகமாக ஒருங்கிணைத்து ஆங்காங்கே உள்ள விடுதிகளில் தங்க வைத்து அதன் விவரங்களை தமிழக அரசுக்கு தெரிவித்து வந்தார்.

இதனைத் தொடர்ந்து அவர்களுக்கு சாப்பாடு வசதி, போக்குவரத்து வசதிகளை செய்து கொடுத்து காஷ்மீரில் இருந்து டெல்லி வழியாக ஊருக்கு செல்ல விரும்புபவர்களை அனுப்பி வைத்தார்.


அதன்படி நேற்று மதியம் தமிழக சுற்றுலா பயணிகள் 35 பேர் தமிழ்நாடு அரசின் பொதிகை இல்லத்துக்கு வந்தனர்.

அவர்களை தி.மு.க. துணை பொதுச் செயலாளர் திருச்சி சிவா எம்.பி., தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி ஏ.கே.எஸ்.விஜயன், ஆணையர் ஆசிஷ்குமார் ஆகியோர் வரவேற்று அரசு இல்லத்தில் உணவு, மருத்துவ வசதிகளை செய்து கொடுத்தனர். இவர்கள் 35 பேரும் நேற்றிரவு 9 மணிக்கு தமிழ் நாடு எக்ஸ்பிரஸ் ரெயிலில் சென்னை புறப்பட்டு வந்து கொண்டிருக்கின்றனர்.

மேலும் 19 பேர் காஷ்மீரில் இருந்து தமிழக அரசின் உதவியுடன் பத்திரமாக மீட்கப்பட்டு ஐதராபாத் வழியாக விமானம் மூலம் அதிகாலை 2.30 மணிக்கு சென்னை விமான நிலையம் வந்தடைந்தனர்.


விமான நிலையத்தில் அவர்களை உறவினர்கள் கண்ணீர் மல்க கட்டி தழுவி வரவேற்றனர். இதில் 14 பேர் மதுரையை சேர்ந்த வர்கள். 5 பேர் சென்னையை சேர்ந்தவர்கள் ஆவார்கள்.


இவர்கள் 19 பேரையும் தமிழக அரசு அதிகாரிகள் வாகனங்களை ஏற்பாடு செய்து அவரவர் ஊர்களுக்கு அனுப்பி வைத்தனர்.

இதே போல் இன்றும் காலையில் காஷ்மீர் மற்றும் டெல்லியில் இருந்து 50 பேர் விமானம் மற்றும் ரெயில் மூலம் சென்னை வந்த டைந்தனர்.


காஷ்மீர் சுற்றுலா சென்ற 140 பயணிகளில் இதுவரை 100 பேர் தமிழகம் திரும்பி உள்ளதாகவும், இன்னும் 40 பேர் அடுத்தடுத்த விமானங்களில் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்க ஏற்பாடு நடந்து வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

காஷ்மீரில் இருந்து அழைத்து வரப்படும் தமிழக பயணிகள் அனைவருக்கும் அவர்கள் ஏற்கனவே எடுத்து வைத்து இருந்த ரிட்டன் டிக்கெட்டை முன் கூட்டியே உடனே பயன் படுத்தி பயணம் செய்யும் வகையில் மத்திய அரசு சிறப்பு ஏற்பாடுகளை செய்து உதவியது. அதே போல் தமிழகத்தில் சொந்த ஊர்களுக்கு செல்வதற்கும் இங்குள்ள அரசு அதிகாரிகள் உதவி செய்து கொடுத்திருந்தனர்.

நேற்றிரவு டெல்லியில் இருந்து புறப்பட்ட தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரெயில் நாளை (வெள்ளிக்கிழமை) காலையில் சென்னை வந்து சேரும். அதில் உள்ள சுற்றுலா பயணிகளை அவரவர் ஊர்களுக்கு அனுப்பி வைக்க சென்டிரலில் வாகன வசதி தயாராக செய்து வைக்கப்பட்டு உள்ளது.

இது குறித்து தமிழக உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
காஷ்மீரில் குண்டு காயம் அடைந்த மதுரையை சேர்ந்த பாலசந்துரு அனந்தநாக் மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். அவருடன் அவரது மனைவி உடன் இருக்கிறார்.


இதே போல் அங்கு சிகிச்சையில் இருக்கும் தமிழகத்தை சேர்ந்த பரமேஷ்வர் (வயது 31), சந்துரு (வயது 83) ஆகியோரும், இவருடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இவர்கள் தற்போது முன்னேற்றம் அடைந்து வருகின்றனர். காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதலில் உயிரிழந்த ஆந்திர மாநிலம் நெல்லூரை சேர்ந்த மதுசூதனராவ் என்பவரின் உடல் விமானம் மூலம் இன்று சென்னை வந்து, பின்னர் இங்கிருந்து நெல்லூருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *