குடியுரிமை அதிகாரிகள் கணக்கெடுப்பின் படி தமிழகத்தில் 200 பாகிஸ்தானியர்கள் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஜம்மு காஷ்மீர் தீவிரவாத தாக்குதலை தொடர்ந்து மத்திய அரசு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. பிரதமர் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்திற்கு பிறகு, வாகா எல்லையை மூட முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவில் உள்ள பாகிஸ்தானியர்கள் 48 மணிநேரத்தில் வெளியேறவும் உத்தரவு பிறப்பித்துள்ளது. பாகிஸ்தானியர்கள் இந்தியா வருவதற்கு இனி விசா வழங்கப்படாது என்றும் பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற பாதுகாப்புக்கான அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
அதேபோல் பாகிஸ்தான் சென்றுள்ள இந்தியர்கள், மே 1ஆம் தேதிக்குள் நாடு திரும்ப வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சார்க் விசா ஒப்பந்தத்தின் கீழ் வழங்கப்பட்டுள்ள விசா மூலம் பாகிஸ்தானியர்கள் இந்தியா வர தடை விதிக்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியா- பாகிஸ்தான் இடையேயான அட்டாரி-வாகா எல்லை உடனடியாக மூடப்படும் என்றும் மத்திய வெளிறவுத்துறை செயலாளர் அறிவித்துள்ளார்.
இந்த நிலையில், தமிழகத்தில் 200 பாகிஸ்தானியர்கள் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
குடியுரிமை அதிகாரிகள் கணக்கெடுப்பின் படி இந்த தகவல் தெரியவந்துள்ளது. 200 பேரில் பெரும்பாலானவர்கள் சென்னையில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
தொழில் மற்றும் மருத்துவ சிகிச்சைக்காக வந்திருப்பவர்களை வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. நாடு முழுவதிலும் இருந்து பாகிஸ்தானியர்கள் வெளியேறி வருகிறார்கள். தமிழகத்திலிருந்தும் பாகிஸ்தானியர்கள் வெளியேறிக் கொண்டிருக்கிறார்கள்.