நாம் ஆட்சிக்கு வர வேண்டும் என நினைப்பதே மக்களுக்காகவும் மக்கள் நலனுக்காகவும் மட்டுமே – தவெக தலைவர் விஜய்!!

கோவை;
கோவை எஸ்.என்.எஸ் கல்லூரியில் தவெக பூத் கமிட்டி முகவர்களுக்கான இரண்டு நாட்கள் பயிற்சி பட்டறை நேற்று (ஏப்.26) தொடங்கியது. இதில் கலந்துகொண்டு அக்கட்சியின் தலைவர் விஜய் பேசியதாவது:-

கோவையில் நடைபெறும் பூத் முகவர்களுக்கான பயிற்சி பட்டறை என்றாலே ஓட்டு தொடர்புடையது என நினைக்க வேண்டாம். ஓட்டு பெறுவது மட்டுமல்ல, நாம் ஆட்சிக்கு வந்தபின் என்ன செய்ய போகிறோம் என்பது குறித்தும் தெரிந்து கொள்வதற்குத்தான்.

நாம் ஆட்சிக்கு வர வேண்டும் என நினைப்பதே மக்களுக்காகவும் மக்கள் நலனுக்காகவும் மட்டுமே. மக்களுடன் எவ்வாறு இணைந்து செயல்பட போகிறோம் என்பதற்கு இந்த பயிற்சி பட்டறையைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

இதற்கு முன் பலர் அரசியலில் வந்து சென்று இருப்பார்கள். பல வாக்குறுதிகளை கூறி ஆட்சியை பிடித்திருப்பார்கள். இனிமேல் அது நடக்காது. நம் கட்சி மீது நல்ல நம்பிக்கை கொண்டு வரப்போவது பூத் கமிட்டி முகவர்கள்தான்.

பூத் முகவர்கள் போர் வீரர்களுக்கு சமமானவர்கள். உங்களுக்கு என்ன அனுபவம் உள்ளது என்று கேட்பார்கள். மனதில் நேர்மை, கறை படியாத அரசியல் செய்ய வேண்டும் என்ற நம்பிக்கை, லட்சியத்துடன் உழைக்க தெம்பு, பேசுவதற்கு உண்மை, செயல்பட திறமை, அர்ப்பணிப்பு குணம் ஆகியவற்றுடன் களம் தயாராக உள்ளது.

இதற்கு மேல் என்ன வேண்டும். களத்தில் சென்று கலக்குங்கள். நம்பிக்கையுடன் இருங்கள். வெற்றி நிச்சயம். இவ்வாறு விஜய் பேசினார்.

முன்னதாக, தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக காலை 11.07 மணிக்கு தனி விமானம் மூலம் கோவை வந்தடைந்தார்.

அவருக்கு கட்சி தொண்டர்கள் மேளதாளம் முழங்க விமான நிலையத்தின் நுழைவுவாயில் பகுதியில் இருந்து அவிநாசி சாலை வரை உற்சாகமாக வரவேற்பு அளித்தனர்.

சாலையின் இருபுறங்களிலும் தொண்டர்கள் மட்டுமின்றி குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் என அனைத்து தரப்பினரும் விஜய்யை காண காத்திருந்தனர்.

சிட்ரா பகுதி மற்றும் நிகழ்ச்சி நடைபெற்ற எஸ்.என்.எஸ் கல்லூரி அமைந்துள்ள பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. போலீஸார் போக்குவரத்து சீரமைப்பு பணிகளை மேற்கொண்டனர்.

கோவையில் இன்று இரவு தங்கும் விஜய் ஞாயிற்றுக்கிழமை நிகழ்ச்சியிலும் பங்கேற்ற பின் நாளை இரவு சென்னை திரும்பி செல்கிறார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *