தமிழக அரசு, தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் விடுத்துள்ள கோரிக்கைகளை காலம் தாழ்த்தாமல் உடனடியாக நிறைவேற்ற முன்வர வேண்டும் – ஜி.கே.வாசன்!!

தமிழக அரசு, தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் விடுத்துள்ள கோரிக்கைகளை காலம் தாழ்த்தாமல் உடனடியாக நிறைவேற்ற முன்வர வேண்டும் என்று ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக தமிழ் மாநில காங்கிரஸ் தலைவரும், எம்.பி.யுமான ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், அரசின் முக்கியத் திட்டங்களை பொது மக்களுக்கான சேவையாக காலம் நேரம் கருதாமல் உழைப்பவர்கள் வருவாய்த்துறை அலுவலர்கள். இப்படி உழைப்பவர்களை போராட்டக்களத்தில் தள்ளும் நிலைக்கு தமிழக அரசு செயல்படுவது நியாயமில்லை.

குறிப்பாக தமிழ்நாட்டு மக்களுக்காக, தமிழ்நாட்டின் வருவாயைப் பெருக்குவதற்காக மிக முக்கியப் பணியாற்றும் வருவாய் அலுவலர்களின் வாழ்வாதாரம் மேம்பட வேண்டும்.அதாவது இளநிலை, முதுநிலை வருவாய் ஆய்வாளர் பெயர் மாற்ற அரசாணையின் அடிப்படையில் விதித்திருந்த ஆணையினை வெளியிட, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அலுவலர்களுக்கு மேம்படுத்தப்பட்ட ஊதியம், தனி ஊதியம் வழங்க, இளநிலை உதவியாளர், தட்டச்சர் ஆகியோருக்கிடையே ஒருங்கிணைந்த முதுநிலை நிர்ணயம் செய்வதில் ஏற்படுத்தப்பட்டுள்ள குளறுபடிகளை சரி செய்திட, அனைத்து வட்டங்களிலும் சான்றிதழ் வழங்கும் பணிக்கென புதிய துணை வட்டாட்சியர் பணியிடங்கள் ஏற்படுத்த உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகள் இன்னும் நிறைவேற்றப்படாததால் வருவாய்த்துறை அலுவலகர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

மேலும் கோரிக்கைகளை ஏற்கும் வரை காலவரையற்ற வேலை நிறுத்தப்போராட்டத்தை தொடர்வது, 04.03.2024 முதல் அனைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் ஒட்டு மொத்த வருவாய்த்துறை அலுவலகர்களும் இரவு பகலாக தொடர்ந்து காத்திருப்பது, 07.03.2024 முதல் சென்னை எழிலகம் வருவாய் நிருவாக ஆணையர் அலுவலகத்தில் அனைத்து மாவட்ட வருவாய்த்துறை அலுவலகர்கள் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபடுவது, இதிலும் தீர்வு எட்டப்படாத பட்சத்தில், நடைபெற இருக்கும் 2024 நாடாளுமன்ற தேர்தல் பணிகளை முற்றாக புறக்கணிப்பது என அறிவித்திருக்கிறார்கள். இதனை தமிழக அரசு மிக முக்கிய கவனத்தில் கொள்ள வேண்டும். ஏனென்றால் வருவாய்த்துறை அலுவலகத்தின் மூலம் நடைபெற வேண்டிய சான்றிதழ் சம்பந்தமான, பட்டா சம்பந்தமான பல்வேறு பணிகளில் தடை ஏற்பட்டு, காலம் காலமாக காத்திருக்கும் சாதாரண ஏழை, எளிய மக்கள் தான் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்படுகிறார்கள்.

எனவே தமிழக அரசு, போராட்டக்களத்தில் இருக்கும் வருவாய்த்துறை அலுவலகர்களின் நீண்ட கால கோரிக்கைகளை இனியும் காலம் தாழ்த்தாமல்தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தின் மாநில நிர்வாகிகளுடன் உடனடி பேச்சுவார்த்தை நடத்தி, நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றி அவர்களின் வாழ்க்கைத்தரம் மேம்படவும், பொது மக்களுக்கான பணிகள் தடையின்றி நடைபெறவும் உதவிட வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன்.என்று குறிப்பிட்டுள்ளார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *