மும்பை இந்தியன்ஸ்-குஜராத் டைட்டன்ஸ் அணிகள் பலப்பரீட்சை!!

சென்னை:
18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 10 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டு மோதுகின்றன.

5 அணிகளுடன் தலா 2 முறை, மீதமுள்ள 4 அணிகளுடன் ஒரு முறை என ஒவ்வொரு அணியும் மொத்தம் 14 லீக்கில் விளையாட வேண்டும். லீக் சுற்று முடிவில் டாப்-4 இடங்களை பிடிக்கும் அணிகள் ‘பிளே-ஆப்’ சுற்றுக்கு முன்னேறும். அதிகாரபூர்வமாக ‘பிளே-ஆப்’ சுற்றை எட்டுவதற்கு 9 வெற்றிகள் தேவையாகும்.

தற்போது லீக் சுற்று விறுவிறுப்பான கட்டத்தை நெருங்குவதால், இனி ஒவ்வொரு ஆட்டத்தின் முடிவும் அதிக முக்கியத்துவம் பெறும்.


இந்த தொடரில் இன்றிரவு மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நடைபெறும் 56-வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ்-குஜராத் டைட்டன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

5 முறை சாம்பியனான மும்பை அணி 11 ஆட்டங்களில் ஆடி 7 வெற்றி, 4 தோல்வி என 14 புள்ளிகள் எடுத்து இருப்பதுடன், ரன்-ரேட் முன்னிலை அடிப்படையில் 3-வது இடம் வகிக்கிறது.

முதலில் சற்று தடுமாறிய மும்பை அணி கடைசியாக 6 ஆட்டங்களில் தொடர்ச்சியாக வாகை சூடி வீறுநடைபோடுகிறது. முந்தைய 6 ஆட்டங்களிலும் அந்த அணி, எந்த அணியையும் 200 ரன்களை எட்டவிடவில்லை.

மும்பை அணியில் பேட்டிங்கில் சூர்யகுமார் யாதவ் (475 ரன்), ரையான் ரிக்கெல்டன் (334), ரோகித் சர்மா, திலக் வர்மா சிறப்பாக செயல்பட்டு வருகிறார்கள். பந்து வீச்சில் டிரென்ட் பவுல்ட் (16 விக்கெட்), கேப்டன் ஹர்திக் பாண்ட்யா (13), ஜஸ்பிரித் பும்ரா (11), தீபக் சாஹர் (9) கலக்குகின்றனர்.

முன்னாள் சாம்பியனான குஜராத் அணி 10 ஆட்டங்களில் ஆடி 7 வெற்றி, 3 தோல்வியுடன் 14 புள்ளிகள் பெற்று 4-வது இடத்தில் இருக்கிறது.


குஜராத் அணியில் பேட்டிங்கில் சாய் சுதர்சன் (504 ரன்), ஜோஸ் பட்லர் (470), கேப்டன் சுப்மன் கில் (465) ஆகியோர் சூப்பர் பார்மில் இருக்கின்றனர். இந்த மூவரையே அந்த அணி அதிகம் நம்பி இருக்கிறது. பந்து வீச்சில் பிரசித் கிருஷ்ணா (19 விக்கெட்), முகமது சிராஜ் (14), சாய் கிஷோர் (12), ரஷித் கான் வலுசேர்க்கின்றனர்.

தங்களது எஞ்சிய ஆட்டங்களில் இரண்டில் வெற்றி கண்டாலே அடுத்த சுற்று வாய்ப்பை அதிகாரபூர்வமாக உறுதி செய்துவிடலாம் என்ற நிலையில் இரு அணிகளும் உள்ளன. அகமதாபாத்தில் நடந்த குஜராத்துக்கு எதிரான முந்தைய ஆட்டத்தில் 36 ரன் வித்தியாசத்தில் தோல்வி அடைந்த மும்பை அணி அதற்கு பதிலடி கொடுக்க முனைப்பு காட்டும்.

அதேநேரத்தில் மும்பை அணியின் தொடர்ச்சியான வெற்றிப்பயணத்துக்கு முடிவு கட்ட குஜராத் அணி எல்லா வகையிலும் முயற்சிக்கும். எனவே இந்த ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது.

உள்ளூர் சூழல் மும்பை அணிக்கு அனுகூலமாக இருக்கும். நடப்பு தொடரில் இங்கு நடந்த 5 ஆட்டங்களில் 4-ல் அந்த அணி வென்றுள்ளது நினைவுகூரத்தக்கது.

இவ்விரு அணிகளும் இதுவரை 6 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் குஜராத் 4 ஆட்டங்களிலும், மும்பை 2 ஆட்டங்களிலும் வெற்றி பெற்று இருக்கின்றன.
போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-

மும்பை: ரையான் ரிக்கெல்டன், ரோகித் சர்மா, சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்ட்யா (கேப்டன்), வில் ஜாக்ஸ், திலக் வர்மா, நமன் திர், கார்பின் பாஷ் அல்லது மிட்செல் சான்ட்னெர், தீபக் சாஹர், டிரென்ட் பவுல்ட், ஜஸ்பிரித் பும்ரா, கரண் ஷர்மா.

குஜராத்: சாய் சுதர்சன், சுப்மன் கில் (கேப்டன்), ஜோஸ் பட்லர், வாஷிங்டன் சுந்தர், ஷாருக்கான், ராகுல் திவேதியா, ரஷித் கான், முகமது சிராஜ், ஜெரால்டு கோட்ஜீ, சாய் கிஷோர், பிரசித் கிருஷ்ணா, இஷாந்த் ஷர்மா அல்லது ரபடா.
இரவு 7.30 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *